அதிரடியில் மிரட்டிய ஜெய்ஸ்வால்..!! - 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.
கொல்கத்தா,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் (10 ரன்), ரஹ்மானுல்லா (18 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக ஆடி 40 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தநிலையில் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக நிதிஷ் ராணா 22 ரன்களும், ஆண்ட்ரே ரசல் 10 ரன்னும், ரிங்கு சிங் 16 ரன்னும், ஷர்துல் தாக்கூர் ஒரு ரன், சுனில் நரைன் 6 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் பட்லர் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்ததாக ஜெய்ஸ்வாலுடன், சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய ஜெய்ஸ்வால் கொல்கத்தா அணியினரின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தார். தனது பங்கிற்கு சஞ்சு சாம்சனும் அதிரடியாக ரன் குவித்தார்.
தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர் மழை பொழிந்த இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 13.1 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.