பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுப்பது என்னுடைய ரத்தத்தில் கலந்துள்ளது - ஷமி பேட்டி


பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுப்பது என்னுடைய ரத்தத்தில் கலந்துள்ளது - ஷமி பேட்டி
x

image courtesy; PTI

விக்கெட் எடுத்த பின் மைதானத்தில் மண்டியிட்டு ஷமி தொழுகை செய்ய முயற்சித்தபோது மற்ற இந்திய வீரர்கள் விடவில்லை என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தனர்.

புதுடெல்லி,

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றது. ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா கோப்பையை தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் அத்தொடரில் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

குறிப்பாக முதல் 4 போட்டிகளில் விளையாடாத ஷமி அதன் பின் சிறப்பாக செயல்பட்டு 24 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா பைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் ஷமி போன்ற இந்திய பவுலர்களுக்கு ஐசிசி மற்றும் பிசிசிஐ ஸ்பெஷல் பந்தை கொடுப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராஜா கடுமையாக விமர்சித்தார். அதனாலேயே இந்திய பவுலர்கள் அதிக ஸ்விங்கை பெற்று நிறைய விக்கெட்டுகளை எடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன் விக்கெட் எடுத்த பின் மைதானத்தில் மண்டியிட்டு ஷமி தொழுகை செய்ய முயற்சித்தபோது மற்ற இந்திய வீரர்கள் விடவில்லை என்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு முகமது ஷமி சமீபத்திய பேட்டியில் கொடுத்த பதிலடி பின்வருமாறு;-

"பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுப்பது என்னுடைய ரத்தத்தில் கலந்துள்ளது. அவர்கள் கிரிக்கெட்டை நகைச்சுவையாக்கியுள்ளார்கள். ஏனெனில் நாம் மற்றவர்களின் வெற்றியை கொண்டாடுவதில்லை. பாராட்டும்போது மகிழ்ச்சியடையும் நீங்கள் தோற்கும்போது மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதாக கருதுகிறீர்கள். இந்திய அணியின் வெற்றி புள்ளி விவரங்களை ஒப்பிட்டு பாருங்கள். அங்கே பாகிஸ்தானால் நெருங்க கூட முடியாது.

. உங்களிடம் இவ்வளவு பொறாமை இருந்தால் கண்டிப்பாக வெற்றி முடிவுகள் கிடைக்காது. என்னுடைய பந்துவீச்சை பாராட்டாத சிலர் குறை சொல்லி களத்தில் நான் தொழுகை செய்ய முயற்சித்தபோது யாரும் அனுமதிக்கவில்லை என்று விமர்சித்தனர். ஆனால் அப்போட்டியில் என்னுடைய சக்தியை தாண்டி தொடர்ந்து 5 ஓவர்கள் வீசினேன். அதன் பயனாக கடைசியில் ஐந்தாவது விக்கெட் கிடைத்தபோது மகிழ்ச்சியில் மண்டியிட்டேன். அப்போது பின்னே இருந்து ஒருவர் தள்ளியதால் நான் முன்னோக்கி சென்றேன்.

அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து நான் தொழுகை செய்ய முயற்சித்தும் இந்திய அணியினர் விடவில்லை என்று சிலர் விமர்சித்தனர். தயவு செய்து இதை நிறுத்துங்கள். ஏற்கனவே சொன்னதுபோல் நான் முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அதே சமயம் நான் இந்தியன். இங்கே நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன். எனவே சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை" என்று கூறினார்.


Next Story