ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணிக்காக அதை செய்வார் - ஷிகர் தவான் நம்பிக்கை


ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணிக்காக அதை செய்வார் - ஷிகர் தவான் நம்பிக்கை
x

image courtesy: AFP

தினத்தந்தி 13 March 2024 2:05 PM GMT (Updated: 13 March 2024 2:28 PM GMT)

ரிஷப் பண்ட் குணமடைந்து வந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ஷிகர் தவான் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பினார். கார் விபத்தில் சிக்கிய அவர், அதற்காக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு கடந்த ஒரு வருடமாக எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. குறிப்பாக கடந்த வருடம் நடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐ.பி.எல். மற்றும் உலகக்கோப்பை ஆகிய 3 தொடர்களில் பங்கேற்க முடியவில்லை.

தற்போது நன்றாக குணமடைந்து மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்ட அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு பிட்டாக இருப்பதாக பெங்களூருவில் உள்ள என்.சி.ஏ. சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட தகுதியானவர் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதிகப்படியான காயங்களை சந்தித்ததால் அன்றாட வாழ்வில் ரிஷப் பண்ட் மிகுந்த சிரமத்தை சந்தித்ததாக மூத்த இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். அதே சமயங்களில் இந்தளவுக்கு ரிஷப் பண்ட் குணமடைந்து வந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

அத்துடன் ஐ.பி.எல் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்து வருங்காலங்களில் இந்தியாவுக்காக முன்பை விட அபாரமாக விளையாடி அற்புதங்களை நிகழ்த்துவார் என்றும் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தவான் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"ரிஷப் பண்ட் மீண்டும் விளையாடுவதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இவ்வளவு பெரிய விபத்திலிருந்து அவர் உயிர் தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி. கடந்த ஒரு வருடத்தில் அவர் மிகவும் கடினமாக உழைத்து நேர்மறையான எண்ணத்தை வெளிப்படுத்தினார். முதல் சில மாதங்களில் எதையும் அசைக்க முடியாத அளவுக்கு அவர் வலியில் இருந்தார்.

குறிப்பாக குளியல் அறைக்கு செல்வதற்கு கூட அவருக்கு உதவி தேவைப்பட்டது. இருப்பினும் அந்த கடினமான காலங்களில் அமைதி மற்றும் நேர்மறையை அவர் காண்பித்தது பெரிய விஷயமாகும். அது அவருக்கு நிறைய பலத்தை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். அவர் மீண்டும் விளையாடி நாட்டுக்காக அற்புதங்களை நிகழ்த்துவார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்" எனக் கூறினார்.


Next Story