'ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு' - டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் பேட்டி


ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு - டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் பேட்டி
x

ரிஷப் பண்ட் இடத்தை டெல்லி அணியில் யாராலும் நிரப்ப முடியாது என்று அந்த அணியின் பயிற்சியாளர் பாண்டிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 1-ந்தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி காயத்தில் இருந்து தேறி வருகிறார். கால்முட்டியில் ஆபரேஷன் செய்து ஓய்வில் இருக்கும் அவர் இந்த ஐ.பி.எல்.-ல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். போட்டியையொட்டி டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப்-5 இடத்திற்குள் இருந்தவர். எங்கள் அணியின் தலைவர். மிடில் வரிசையில் 4-வது இடத்தில் பேட்டிங் செய்து ஆட்டத்தை வெற்றிகரமாக எங்களுக்கு முடித்து தரக்கூடியதில் வல்லவர். நிச்சயம் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

இளம் ஆல்-ரவுண்டர் அமன் கானை கொல்கத்தா நைட் ரைடர்சிடம் இருந்து ஷர்துல் தாக்குரை கொடுத்து பரஸ்பரம் அடிப்படையில் வாங்கினோம். பயிற்சியில் அவரது செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. எந்த அளவுக்கு நீங்கள் அவரை களத்தில் பார்க்கப்போகிறீர்கள் என்பது தெரியாது. ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பயிற்சி செய்து வரும் விதம் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது.

எனவே மிடில் வரிசையில் சில அதிரடி வீரர்கள் இல்லாத போது, அமன்கான், ரோமன் பவெல் மற்றும் அக்ஷர் பட்டேல் போன்ற வீரர்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம். ரிஷப் பண்ட் இடத்திற்கு சரியான வீரரை கண்டறிய வேண்டும். என்றாலும் அவரை போன்று அதே தரமான வீரர் கிடைக்கமாட்டார்.

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டேவிட் வார்னர் 4-வது வரிசையில் விளையாடி இருக்கலாம். ஆனால் ஐ.பி.எல்.-ல் அவரை 4-வது வரிசையில் பயன்படுத்த விரும்பவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் வார்னரும் ஒருவர். கடந்த ஆண்டில் அவர் டெல்லி அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடியதை பார்த்தோம். கடந்த ஆண்டு தொடரில் எங்கள் அணிக்காக நிறைய ரன்கள் (12 ஆட்டத்தில் 432 ரன்) குவித்தது மட்டுமின்றி, தனது சிறப்பான பேட்டிங்கால் வெற்றியையும் தேடித்தந்தார். தொடக்க வரிசையில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.

கணுக்கால் காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட மிட்செல் மார்ஷ் 3-4 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினார். அண்மையில் இந்திய தொடரில் விளையாடிய அவர் மிகச்சிறந்த பார்முடன் ஐ.பி.எல். போட்டிக்கு வருகிறார். அவர் எங்கள் அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன் மற்றும் ஆல்-ரவுண்டர். அவர் காயத்துக்கு பிறகு போட்டிகளில் இன்னும் பந்து வீசவில்லை. கடந்த 4-5 வாரங்களாக பந்து வீச்சு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அணியில் அவரது பணி பேட்டிங் மட்டுமின்றி சில ஓவர்கள் பந்து வீச வேண்டும் என்பதாகும். அதை அவரும் புரிந்து கொண்டுள்ளார்.

இந்த ஐ.பி.எல். சீசனில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி இன்னிங்சின் பாதியில் ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக புத்துணர்ச்சியுடன் மாற்று வீரரை கொண்டு வர முடியும். இந்த விதி கிட்டத்தட்ட ஆல்-ரவுண்டர்களின் அவசியத்தை குறைத்து விடும் என்று கருதுகிறேன்.

அதாவது பேட்டிங் அல்லது பந்து வீச்சில் வலுவாக இருக்கும் அணி தேவைக்கு தகுந்தபடி ஒரு வீரரை வெளியே எடுத்து விட்டு மற்றொரு வீரரை கொண்டு வந்து விடுவார்கள். உலகத் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்களுக்கு மதிப்பு இருக்கும். ஆனால் சுமாரான ஆல்-ரவுண்டருக்கு பதிலாக ஒரு பிரதான பேட்ஸ்மேனையோ அல்லது ஒரு பந்து வீச்சாளரையோ இந்த விதிப்படி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

வீரர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம். ஒரு சிறந்த மனிதரால் தான் எளிதில் சிறந்த வீரராக உருவெடுக்க முடியும். உங்களது தனிப்பட்ட வாழ்க்கை முறையாக இல்லாவிட்டால் உண்மையிலேயே களத்தில் சாலச்சிறந்த வீரராக செயல்படுவது கடினம்."

இவ்வாறு பாண்டிங் கூறினார்.


Next Story