டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு ரோகித் மற்றும் கோலி கண்டிப்பாக அணியில் இடம் பெற வேண்டும் - இர்பான் பதான்


டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு ரோகித் மற்றும் கோலி கண்டிப்பாக அணியில் இடம் பெற வேண்டும் - இர்பான் பதான்
x
தினத்தந்தி 8 Dec 2023 3:05 PM GMT (Updated: 8 Dec 2023 3:11 PM GMT)

டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உள்ள மைதானங்கள் பேட்டிங்கிற்கு சவாலாக இருக்கும் என்பதால் அதில் சாதிப்பதற்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற அனுபவமிக்க வீரர்கள் கண்டிப்பாக அணியில் இடம் பெற வேண்டும் என இர்பான் பதான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். காரணம் என்னவென்றால் நாம் உலகக்கோப்பையில் விளையாடுகிறோம். அந்த உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறுகிறது. அங்குள்ள மைதானங்கள் தற்போது மாறியுள்ளன. ஐசிசி தொடர்களில் அது நன்றாக இருக்கலாம். இருப்பினும் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலைகள் அங்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.

உதாரணமாக அங்கு சமீபத்தில் நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் மற்றும் உள்ளூர் தொடர்களில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு கடினமாக இருந்தது. அது போன்ற சூழ்நிலைகளில் சாதிக்க உங்களுக்கு அனுபவம் தேவை. 2023 உலகக்கோப்பையில் ஒரு போட்டியை தவிர்த்து நாம் அனைத்திலும் வென்றதால் பெரிய அளவில் மாற்றங்கள் தேவையில்லை.

இங்கே நிறைய பேர் டி20 கிரிக்கெட்டில் புதுமையான அணுகுமுறை தேவை என்று பேசுகின்றனர். ஆனால் தற்சமயத்தில் ரோகித் சர்மாதான் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக இருக்கிறார். அவர் கடந்த உலகக்கோப்பையில் இந்தியாவின் அணுகுமுறையை மாற்றி அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். அவர் கேப்டனாக தொடர வேண்டும். விராட் கோலியின் அனுபவத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.


Next Story