ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா..!!
கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினர்.
இந்தூர்,
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. இந்திய அணியில் முகமது சிராஜ், முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல் இடம் பிடித்தனர். நியூசிலாந்து அணியில் ஒரே மாற்றமாக ஷிப்லிக்கு பதில் ஜேக்கப் டப்பி சேர்க்கப்பட்டார்.
'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். குறைவான பவுண்டரி தூரம் கொண்ட இந்த மைதானத்தில் ஆடுகளமும் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் கணிப்புபடியே ரன்மழை பொழிந்தனர்.
ரோகித், கில் சதம்
4-வது ஓவருக்கு பிறகு அதிரடிவேட்டையை ஆரம்பித்த ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டனர். பெர்குசனின் ஒரே ஓவரில் சுப்மன் கில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ரோகித் சர்மா தனது பங்குக்கு ஜேக்கப் டப்பி, சான்ட்னெரின் ஓவர்களில் இரு சிக்சர் வீதம் பறக்கவிட்டு பிரமாதப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. 12.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100-ஐ தொட்டது.
அவர்களின் தடாலடியான பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியாமல் நியூசிலாந்து விழிபிதுங்கியது. எல்லா பந்து வீச்சையும் அவர்கள் பொளந்து கட்டினர். 24.1 ஓவர்களில் அணி 200-ஐ கடந்தது.
அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் தனது 30-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். கடைசியாக 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்டிருந்தார். அதே ஓவரில் சுப்மன் கில் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டு 72 பந்துகளில் சதத்தை சுவைத்தார். தனது 21-வது ஒரு நாள் போட்டியில் ஆடும் அவருக்கு இது 4-வது சதமாகும். ஒரு நாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் காண்பது இது 10-வது நிகழ்வாகும்.
இந்தியா 385 ரன்
சதம் அடித்த கையோடு இருவரும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். ஸ்கோர் 212 ஆக (26.1 ஓவர்) உயர்ந்த போது ரோகித் சர்மா 101 ரன்களில் ( 85 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல்லின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்த ஓவரில் சுப்மன் கில் 112 ரன்களில் (78 பந்து, 13 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்தார். இவர்கள் கூட்டாக திரட்டிய 212 ரன்களே நியூசிலாந்துக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்சமாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் ஹாமில்டனில் நடந்த ஆட்டத்தில் ஷேவாக்- கம்பீர் தொடக்க ஜோடி 201 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
ரோகித் சர்மா- சுப்மன் கில் ஆடிய விதத்தை பார்த்த போது அணியின் ஸ்கோர் 420-ஐ நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ரன்ரேட் கொஞ்சம் தளர்ந்து போனது. அடுத்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி 36 ரன்னிலும் (27 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 17 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 14 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
நல்லவேளையாக கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா கைகொடுத்தார். அவரது அதிரடி ஜாலத்தால் ஸ்கோர் 380-ஐ தாண்டியது. பாண்ட்யா 54 ரன்கள் (38 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஷர்துல் தாக்குரும் (25 ரன், 17 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கணிசமான பங்களிப்பு அளித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
கான்வே 138 ரன்
அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் முதல் ஓவரிலேயே பின் ஆலென் (0) போல்டு ஆனார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே நிலைத்து நின்று விளையாடி துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினார். 58 ரன்னில் எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பில் இருந்து தப்பித்த கான்வே அடுத்தடுத்து இரு சிக்சரோடு தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். அவர் களத்தில் நின்றது வரை நியூசிலாந்துக்கு லேசான வெற்றி வாய்ப்பு தென்பட்டது.
இதற்கு மத்தியில் ஷர்துல் தாக்குர் அந்த அணியின் மிடில் வரிசை விக்கெட்டுகளை காலி செய்து நெருக்கடி கொடுத்தார். 32-வது ஓவர் வரை போராடிய கான்வே 138 ரன்களில் (100 பந்து, 12 பவுண்டரி, 8 சிக்சர்) கேட்ச் ஆனதும் நியூசிலாந்தின் நம்பிக்கை தகர்ந்தது. தொடக்க ஆட்டத்தில் மிரட்டிய மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். முடிவில் நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகன் விருதையும், சுப்மன் கில் (3 ஆட்டத்தில் 360 ரன்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
தொடரை முழுமையாக வென்றது
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
அடுத்து இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 27-ந்தேதி இரவு 7.30 மணிக்கு ராஞ்சியில் நடக்கிறது.
இந்தியா 'நம்பர் ஒன்'
இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் 110 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தது. இப்போது நியூசிலாந்தை முழுமையாக வீழ்த்தியதன் மூலம் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து 6 புள்ளிகளை பறிகொடுத்து 111 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையிலும் இந்தியா நம்பர் ஒன் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா
* இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா 101 ரன்கள் எடுத்து தனது 30-வது சதத்தை பதிவு செய்தார். ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (46) ஆகியோருக்கு அடுத்துள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குடன் (30 சதம்) 3-வது இடத்தை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா (28 சதம்) இருக்கிறார்.
*இந்த ஆட்டத்தில் விளாசிய 6 சிக்சரையும் சேர்த்து ரோகித் சர்மாவின் ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 273 ஆக (241 ஆட்டம்) உயர்ந்தது. ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர்களின் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த இலங்கையின் சனத் ஜெயசூர்யாவை (268 சிக்சர்) ரோகித் சர்மா பின்னுக்கு தள்ளினார். முதல் இரு இடங்களில் பாகிஸ்தானின் அப்ரிடி (351 சிக்சர்), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (331 சிக்சர்) உள்ளனர்.
* இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இந்த தொடரில் 208, 40, 112 ரன் வீதம் மொத்தம் 360 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் (2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் 360 ரன்) சாதனையை சமன் செய்தார்.
* நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்பி 10 ஓவர்கள் பந்து வீசி 100 ரன்களை வாரி வழங்கினார். ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
* இந்தியா தரப்பில் இந்த ஆட்டத்தில் மொத்தம் 19 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் (2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் 19 சிக்சர்) செய்துள்ளது.
* இந்தூர் மைதானத்தில் ஒரு நாள் போட்டியில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணி இங்கு பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.