பரபரப்பான கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியது ஏன்? - கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்


பரபரப்பான கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியது ஏன்? - கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
x

Image tweeted by ICC

கடைசி ஓவரை அனுபவ வீரர் ஷமி வீசப்போகிறாரா அல்லது அர்ஷ்தீப் வீசப்போகிறாரா என ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

அடிலெய்டு,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி வெற்றி பெற 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த போட்டியில் பரபரப்பான கடைசி ஓவரில் (16-வது ஓவர்) வங்காளதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் அந்த ஓவரை அனுபவ வீரர் ஷமி வீசப்போகிறாரா அல்லது அர்ஷ்தீப் சிங் வீசப்போகிறாரா என ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அர்ஷ்தீப் சிங்கிடம் ஓவர் கொடுக்க ரோகித் சர்மா முடிவு செய்தார்.

அர்ஷ்தீப் வீசிய அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் வங்காளதேச அணி 15 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டி நிறைவடைந்த பின்னர் வர்ணனையாளரிடம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்தார். அப்போது ரோகித் பேசியதாவது:-

ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயங்களில் டெத் ஓவர்களை வீச தயாராக இருக்கும்படி அர்ஷ்தீப் சிங்யிடம் ஏற்கனவே கூறியிருந்தோம். ஒரு இளம் வீரர் இதனை செய்வது சுலபம் கிடையாது.

ஆனால் கடந்த 9 மாதங்களாக அர்ஷ்தீப் சிங் இதனை செய்து வருகிறார். அதனால் தான் முகமது ஷமியா? அர்ஷ்தீப்பா? என்ற தேர்வில் அர்ஷ்தீப்பை தேர்வு செய்தோம் . இனியும் தொடர்ந்து அவர் இதை செய்வார்' என ரோகித் சர்மா விளக்கம் அளித்தார்.


Next Story