20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த ரோகித் சர்மா


20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த ரோகித் சர்மா
x

11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய சாதனையாளர் பட்டியலில் 7-வது வீரராக ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மாலை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. இதில் 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தது. அடுத்து 201 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் நுழைந்தனர். இஷான் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் இணைந்து அதிரடியில் மிரட்டினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 100 ரன் விளாசினார். நடப்பு ஐ.பி.எல்.-ல் அடிக்கப்பட்ட 9-வது சதம் இதுவாகும். இந்த ஆட்டத்தில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா 44 ரன் எடுத்த போது ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் (சர்வதேச மற்றும் ஐ.பி.எல். போன்ற லீக் சேர்த்து) 11 ஆயிரம் ரன்களை கடந்தார். இதுவரை 421 ஆட்டங்களில் விளையாடி 11,016 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா இந்த மைல்கல்லை எட்டிய சாதனையாளர் பட்டியலில் 7-வது வீரராக இணைந்துள்ளார். இந்த ஆட்டத்தின் முடிவில், மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Next Story