ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் புதிய வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் ரோகித் சர்மா...!
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.
மும்பை,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக இடம் பெறாததால் ரோகித் அணியை வழிநடத்துகிறார்.
ரோகித் சர்மா 51 டி20 போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக இருந்து 39 வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும் 12 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ரோகித் சர்மா இந்திய அணிக்காக 148 டி20 போட்டிகளில் ஆடி 3,853 ரன்கள் அடித்துள்ளார். இதில் 4 சதம், 29 அரைசதம் அடங்கும்.
மேலும் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் மொத்தம் 182 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் புதிய வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, எதிர்வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் மேலும் 18 சிக்சர்கள் அடித்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.