'ரோகித் சர்மாவின் ஆட்டம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஜமாம் உல் ஹக்கை நினைவுபடுத்துகிறது ' - வாசிம் அக்ரம்


ரோகித் சர்மாவின்  ஆட்டம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஜமாம் உல் ஹக்கை நினைவுபடுத்துகிறது  -  வாசிம் அக்ரம்
x
தினத்தந்தி 13 Nov 2023 9:19 AM GMT (Updated: 13 Nov 2023 10:48 AM GMT)

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

கராச்சி,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்த தொடரில் இதுவரை 9 போட்டியில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 503 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதால் அணிக்கும் நல்ல ஸ்கோர் கிடைக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் பத்து பவர்பிளே ஓவர்களில் மட்டும் 307 ரன்களை ரோகித் சர்மா அடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த அசத்தலான ஆட்டம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஜமாம் உல் ஹக்கை நினைவுபடுத்துவதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்;-

' இன்ஜமாம் உல் ஹக் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் நேரம் இருக்கும். அதேபோன்று ரோகித் சர்மாவிற்கும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாடும்போது கூடுதலான நேரம் கிடைக்கிறது. அவரது கை மற்றும் கண்களின் பார்வையும் வெகு சிறப்பாக இருப்பதால் அவரால் எளிதாக வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து விளையாட முடிகிறது. அவர் இப்படி ஆட்டத்தின் துவக்கத்திலேயே அதிரடியாக ரன்களை குவிப்பதால் பின்னால் வரும் வீரர்களுக்கும் ஆட்டம் சாதகமாக இருக்கிறது.

எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். முதல் ஓவரிலிருந்தே அவர் அடித்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக மாறுகிறது. ரோகித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் இருக்கும்போது எதிரணியில் இருக்கும் பவுலர்களுக்கு நிச்சயம் சிரமமாகத்தான் இருக்கும்' என்று கூறியுள்ளார்.


Next Story