இந்தியாவில் கிடைக்காத வாய்ப்பு....இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாட தேர்வான சாய் சுதர்சன்...!


இந்தியாவில் கிடைக்காத வாய்ப்பு....இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாட தேர்வான சாய் சுதர்சன்...!
x

Image Courtesy : @gujarat_titans twitter

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி தொடரில் சர்ரே அணிக்காக விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தமாகி உள்ளார்.

லண்டன்,

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார்.

இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதைத்தொடர்ந்து தியோதார் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணியின் வெற்றியிலும் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கிறார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. சர்ரே அணிக்காக விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்ரே அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர்கள் சிலர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட உள்ளனர்.

இதன் காரணமாக சர்ரே அணிக்காக நடைபெற்று வரும் கவுண்ட்டி தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். ஆனால் இளம் வீரரான சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக தேர்வாகியுள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story