நாட்டுக்காக விளையாடும் அவருக்கு சல்யூட் - இந்திய வீரரை பாராட்டிய இர்பான் பதான்


நாட்டுக்காக விளையாடும் அவருக்கு சல்யூட் - இந்திய வீரரை பாராட்டிய இர்பான் பதான்
x

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் மிகப்பெரிய காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் காயமடைந்து விடுவோம் என்பதை பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக மிகவும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து விளையாடுவதற்காக சல்யூட் செய்கிறேன் என்று இர்பான் பதான் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;-

"ஷமி இல்லாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அதற்காக பும்ரா மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல. அவருடைய ஆக்சன் தற்போது கச்சிதமாக இருக்கிறது. பொதுவாக ஷமி ஒருபுறம் அழுத்தத்தை கொடுக்கும்போது பும்ரா எதிர்ப்புறம் விக்கெட்டுகளை எடுப்பார். அவர்களுடைய பார்ட்னர்ஷிப் ஒருவர் மீதான அழுத்தத்தை மற்றொருவர் குறைப்பதுடன் அணிக்கும் நல்லதை செய்கிறது.

நான் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் அணுகுமுறைக்கு மிகப்பெரிய ரசிகன். அவர் காயங்களைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நாட்டுக்காக மிகவும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார். அதனால் நான் அவருக்கு சல்யூட் செய்கிறேன். ஏனெனில் அவர் தன்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க முயற்சிக்கிறார் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். அதனால் மீண்டும் காயத்தை சந்தித்தாலும் நான் அவருக்கு சல்யூட் செய்வேன்" என்று கூறினார்.


Next Story