இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு

Image Courtacy: EnglandCricketTeamTwitter
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கராச்சி,
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்படி 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கராச்சி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பாக தொடக்கம் அமைத்த இந்த ஜோடியில் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மலான் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து பிலிப் சால்ட்டும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கி அதிரடி காட்டி வந்த பென் டுக்கெட் 43 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹேரி பூருக் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த மொயின் அலி, சாம் கரண் ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய மொயின் அலி தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இறுதியில் மொயின் அலி 55 (33) ரன்களும், சாம் கரண் 10 (8) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக தஹானி மற்றும் ஹாரிஸ் ராவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது நவாஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் அணி களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.






