'மூத்த வீரர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்குகின்றனர்' - ஜெய்ஸ்வால் பேட்டி


மூத்த வீரர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்குகின்றனர் - ஜெய்ஸ்வால் பேட்டி
x

Image Courtesy : @BCCI twitter

தினத்தந்தி 14 Aug 2023 6:09 AM IST (Updated: 14 Aug 2023 11:10 AM IST)
t-max-icont-min-icon

இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்குகின்றனர் என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

லாடெர்ஹில்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெட்மயர் 61 ரன்னும், ஷாய் ஹோப் 45 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. தொடக்க விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த நிலையில் தொடக்க வீரர் சுப்மன் கில் 77 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்றொரு இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்கள் (51 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 20 ஓவர் போட்டியில் முதல் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதன் மூலம் ஜெய்ஸ்வால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 75 ரன்களுக்கு மேல் எடுத்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை தனதாக்கினார். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 வயதில் ரோகித் சர்மா ஆட்டம் இழக்காமல் 79 ரன்கள் எடுத்ததே இந்திய இளம் வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. அந்த 13 ஆண்டு கால சாதனையை 21 வயது ஜெய்ஸ்வால் தகர்த்தார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்த நிலையில் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில், 'அணியின் தேவைக்கு தகுந்தபடி விளையாட முயற்சிக்கிறேன். எவ்வளவு வேகமாக ரன் குவிக்க முடியும் என்பதில் தான் எனது சிந்தனை உள்ளது. 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து அதிரடியாக ஆடுவதில் கவனம் செலுத்துவேன். இது தொடக்கம் தான். இதேபோல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த முதலாவது அரைசதம் சிறப்புக்குரியது. இந்திய அணிக்காக விளையாடுவது எப்பொழுதும் பெருமைக்குரிய விஷயமாகும்.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்திக் உள்ளிட்ட அனைவரும் நல்ல ஆலோசனைகளை வழங்குகின்றனர். அவர்களிடம் பேசுகையில் கிடைக்கும் ஆலோசனைகளை எனது ஆட்டத்தில் அமல்படுத்துவேன். எனது உடல் தகுதிக்காக கடினமாக உழைத்து வருகிறேன். உணவு, தூக்கம் உள்ளிட்ட விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனது செயல்முறை சரியாக அமைந்தால் முடிவுகள் தானாக வரும். உங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டால் சாதிக்கலாம்' என்று தெரிவித்தார்.


Next Story