உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஷமி... மிட்செல் ஸ்டார்கின் சாதனையை சமன் செய்தார்...!
இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
மும்பை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் விளாசினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ள முகமது ஷமி மகத்தான சாதனைகளை படைத்தார். உலகக்கோப்பை வரலாற்றில் முகமது ஷமி 3வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மிட்செல் ஸ்டார்கின் சாதனையை சமன் செய்துள்ளார். இவரின் இந்த சாதனையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.