நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி: தென்ஆப்பிரிக்கா வெளியேற்றம் - ஒரே உலக கோப்பையில் அதிக அதிர்ச்சி தோல்விகள்..?


நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி: தென்ஆப்பிரிக்கா வெளியேற்றம் - ஒரே உலக கோப்பையில் அதிக அதிர்ச்சி தோல்விகள்..?
x

image courtesy: Cricket Netherlands twitter

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவிய தென்ஆப்பிரிக்க அணி சூப்பர்12 சுற்றுடன் வெளியேறியது.

அடிலெய்டு,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் நேற்று காலை நடந்த ஆட்டத்தில் (குரூப்2) தென்ஆப்பிரிக்கா, குட்டி அணியான நெதர்லாந்தை எதிர்கொண்டது. 'வெற்றி பெற்றால் அரைஇறுதி, தோற்றால் வெளியேற்றம்' என்ற வாழ்வா-சாவா? சூழலில் 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீபன் மைபர்க் (37 ரன்), மேக்ஸ் டி டாவ்ட் (29 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த டாம் கூப்பர் (35 ரன்), காலின் அகெர்மான் (41 ரன், 26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பு அளிக்க, அந்த அணி 150 ரன்களை கடந்து சவாலான நிலையை அடைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெதர்லாந்து 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. துல்லியமாக பந்து வீசி குடைச்சல் கொடுத்த நெதர்லாந்து பவுலர்கள், குயின்டான் டி காக் (13 ரன்). கேப்டன் பவுமா (20 ரன்), ரோசவ் (25 ரன்) ஆகியோரை சீக்கிரம் காலி செய்தனர்.

இதன் பின்னர் மார்க்ராமும், டேவிட் மில்லரும் கைகோர்த்து அணியை கரைசேர்க்க சிறிது நேரம் போராடினர். இவர்கள் நின்றது வரை தென்ஆப்பிரிக்கா பக்கம் சற்று உற்சாகம் தென்பட்டது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. ஸ்கோர் 90-ஐ (12.3 ஓவர்) எட்டிய போது மார்க்ராம் 17 ரன்களில் (13 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார். தொடர்ந்து டேவிட் மில்லரும் (17 ரன்) நடையை கட்ட நெதர்லாந்தின் கை ஓங்கியது. அடுத்து வந்த வீரர்களால் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க இயலவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் அந்த ஓவரில் 12 ரன்களே எடுக்க முடிந்தது.

20 ஓவர் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 145 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நெதர்லாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும், இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவுடன் மோதிய 4 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு 20 ஓவர் போட்டியிலும் தோற்றிருந்தது.

இந்த தோல்வியால் 5 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தென்ஆப்பிரிக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. குரூப்2-ல் அரைஇறுதிக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக தென்ஆப்பிரிக்கா இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. கணிப்புக்கு மாறாக தென்ஆப்பிரிக்கா, சிறிய அணியிடம் சரணாகதியாகி விட்டது.

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்த நிலையில், ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது தென்ஆப்பிரிக்காவுக்கு முதல் சறுக்கலாக இருந்தது. அதில் வெற்றி பெற்றிருந்தால் இவ்வளவு சிக்கல் உருவாகி இருக்காது. இதுவரை எந்த உலக கோப்பை பட்டத்தையும் வெல்லாத தென்ஆப்பிரிக்கா சோகம் இந்த முறையும் தொடருகிறது.

நெதர்லாந்தின் வெற்றியை அந்த நாட்டினர் மட்டுமின்றி, பாகிஸ்தான், வங்காளதேச ரசிகர்களும் கொண்டாடினர். ஏனெனில் தென்ஆப்பிரிக்கா தோற்றதால் தான் பாகிஸ்தான், வங்காளதேசத்துக்கு அரைஇறுதி வாய்ப்புக்கான கதவு திறந்தது.

5-வது ஆட்டத்தில் ஆடிய நெதர்லாந்துக்கு இது 2-வது வெற்றியாகும். சூப்பர்12 சுற்றில் தனது பிரிவில் டாப்-4 இடத்திற்குள் நுழைந்ததன் மூலம் நெதர்லாந்து 2024-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கிறது. நெதர்லாந்து வீரர் அகெர்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

வெற்றிக்கு பிறகு நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறுகையில், ' மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. 160 ரன்களை நெருங்கி விட்டால் எதிரணியை மடக்கி விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இது சிறப்பான அனுபவம். இந்த உலக கோப்பை போட்டியில் முன்னணி அணிக்கு நெதர்லாந்திடம் இருந்து இன்னொரு அதிர்ச்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.' என்றார்.

தோல்வியால் விரக்தி அடைந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறும் போது, 'தோல்வியை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. நிச்சயம் அரைஇறுதிக்கு முன்னேறி விடுவோம் என்று நம்பினோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போய் விட்டது. முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாகிப் போனது. மைதானத்தின் வித்தியாசமான சுற்றளவில் எங்களை விட நெதர்லாந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது' என்றார். உணர்ச்சிபூர்வமான இந்த நிலைமையில் இப்போது கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன், சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து பேசுவேன் என்றும் பவுமா குறிப்பிட்டார்.

இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அதிரடி சூரர் டேவிட் மில்லர் 17 ரன்னில் கேட்ச் ஆனார். இது தான் ஆட்டத்தின் திருப்பு முனை. வேகப்பந்து வீச்சாளர் குளோவர், 'ஷாட்பிட்ச்'சாக வீசிய பந்தை மில்லர் தூக்கியடித்த போது, 'ஷாட் பைன் லெக்' திசையில் இருந்து 'ஸ்கொயர் லெக்' பகுதிக்கு கிட்டத்தட்ட 18 மீட்டர் தூரம் ஓடிவந்து வான்டெர் மெர்வ் கேட்ச் செய்தார். பிரமாதமாக கேட்ச் செய்த ஆல்-ரவுண்டர் வான்டெர் மெர்வ் தென்ஆப்பிரிக்க நாட்டவர் ஆவார். முன்பு தென்ஆப்பிரிக்க அணிக்காக 2009 மற்றும் 2010-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடர்களிலும் விளையாடி இருக்கிறார். அதன் பிறகு நெதர்லாந்துக்கு இடம் பெயர்ந்து அந்த அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் 37 வயதான வான்டெர் மெர்வ் சொந்த நாட்டு அணிக்கே ஆப்பு வைத்து விட்டார்.

இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நிறைய அதிர்ச்சி தோல்விகள் பதிவாகியுள்ளன. முதல் சுற்றில் நமிபியா, முன்னாள் சாம்பியன் இலங்கையையும், ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள், 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீசையும் பதம் பார்த்தன. சூப்பர்12 சுற்றில் அயர்லாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், ஜிம்பாப்வே ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் தோற்கடித்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது தென்ஆப்பிரிக்காவும் நெதர்லாந்திடம் மண்ணை கவ்வியிருக்கிறது.


Next Story