'பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ராகுல் 4வது களம் இறங்க வேண்டும்'- யுவராஜ் சிங்
உலகக்கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ராகுல் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
புது டெல்லி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் வெறும் 199 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் பந்துவீச்சில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.விராட் கோலியும் வந்த வேகத்தில் வெளியேறி இருக்க வேண்டியது. அதிர்ஷ்டவசமாக 12 ரன்னில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிட்செல் மார்ஷ் தவற விட்டார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், கே.எல். ராகுலும் இணைந்து அணியை படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்டனர். அவசரப்படாமல் ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்திய இவர்கள் ஸ்கோர் 100-ஐ கடந்ததும் நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு வேகம் காட்டினர்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி (85 ரன், 116 பந்து, 6 பவுண்டரி) இலக்கை நெருங்கிய போது ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் ராகுல் சிக்சருடன் இன்னிங்சை முடித்து வைத்தார். இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராகுல் 97 ரன்களுடனும் (115 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ராகுல் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் "நம்பர் 4 பேட்ஸ்மேன் அழுத்தத்தை ஏற்று விளையாட வேண்டும். இந்த ஆட்டத்தில் விரைவில் விக்கெட்டுகளை இழந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் இன்னிங்ஸை கட்டமைப்பு செய்யும் வகையில் யோசித்து விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அவரும் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் சதமடித்த பின்பும் ராகுல் ஏன் 4வது இடத்தில் விளையாடவில்லை என்பது எனக்கு புரியவில்லை. அதேபோல விராட் கோலியின் கேட்சை விட்டது ஆஸ்திரேலியாவுக்கு தோல்வியை கொடுத்து இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.