ஸ்ரேயஸ் அய்யர் சதம்... 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரவெற்றி


ஸ்ரேயஸ் அய்யர் சதம்... 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரவெற்றி
x
தினத்தந்தி 9 Oct 2022 3:45 PM GMT (Updated: 9 Oct 2022 3:49 PM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது.

ராஞ்சி,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும் ஜன்னிமன் மலனும் களமிறங்கினர். டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மலன் 25 ரன்கள் எடுத்தார்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹெண்ட்ரிக்ஸ்சுக், மார்க்ரமும், அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். ஹெண்ட்ரிக்ஸ் 74 ரன்களும், மார்க்ரம் 79 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதிகட்டத்தில் கிளாசன் 35 ரன்களும், மில்லர் 34 ரன்களும் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவனும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். தவன் 13 ரன்களும், கில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக இஷான் கிஷனும், ஸ்ரேயஸ் அய்யரும் ஜோடி சேர்ந்து அணியில் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். முதலில் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன், பின்னர் அதிரடி காட்டினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் அய்யர், சதமடித்து 113 ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அவருடன் இணைந்த சஞ்சு சாம்சன் தன் பங்குக்கு 30 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் இந்திய அணி 45.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.


Next Story