'உலகக் கோப்பை போட்டியில் இலக்கை விரட்டிப்பிடிப்பது முக்கியம்' - இந்திய வீரர் சுப்மன் கில் பேட்டி


உலகக் கோப்பை போட்டியில் இலக்கை விரட்டிப்பிடிப்பது முக்கியம் - இந்திய வீரர் சுப்மன் கில் பேட்டி
x

image courtesy: ICC twitter

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நெருக்கடிக்கு மத்தியில் இலக்கை துரத்திப்பிடிப்பது முக்கியமானது என்று இந்திய வீரர் சுப்மன் கில் கூறினார்.

புனே,

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் புனேயில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வாட்டி வதைத்தது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 257 ரன் இலக்கை இந்திய அணி விராட் கோலியின் சதம் (103 ரன்) மற்றும் சுப்மன் கில்லின் அரைசதத்தோடு (53 ரன்) 41.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

பின்னர் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, இலங்கையில் ஆசியகோப்பை போட்டியில் விளையாடிய போது அங்குள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தன. ஆனால் இங்கு முதல் ஆட்டத்திற்கு பிறகு, ஆடுகளம் சுழலுக்கு பெரிய அளவில் உதவிகரமாக இல்லை என்பது தெரிந்தது. இப்படிப்பட்ட சூழலிலும் மிடில் ஓவர்களில் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜாவும் (2 விக்கெட்), குல்தீப் யாதவும் (ஒரு விக்கெட்) பந்துவீசிய விதம் அற்புதம். அது தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

ஒரு கட்டத்தில் வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் விளையாடிய விதத்தை பார்த்த போது அவர்கள் 300-320 ரன்கள் வரை எடுக்கக்கூடும் என்று தோன்றியது. ஆனால் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த கூட்டணியை உடைத்ததுடன், அவர்களை தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கி ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர். இது தான் ஆட்டத்தின் போக்கில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக நடந்த தொடர்களில் நாங்கள் அதிக ஸ்கோரை விரட்டிப்பிடிக்கும் (சேசிங்) முயற்சியில் சிறப்பாக செயல்படவில்லை. முதலில் பேட்டிங் செய்யும்போது பெரும்பாலும் நிறைய ரன் குவித்து விடுகிறோம். ஆனால் 2-வது பேட்டிங்கில் தடுமாறுவது குறித்தும், அதை சரி செய்வது குறித்தும் அணி வீரர்கள் கூட்டத்தில் விவாதித்தோம்.

தற்போது இந்த உலகக் கோப்பையில் விளையாடிய முதல் 4 ஆட்டங்களிலும் வெற்றிகரமாக 'சேசிங்' செய்திருக்கிறோம். இது போன்ற பெரிய போட்டிகளில் 'சேசிங்' செய்வது மிகவும் முக்கியமானது. பேட்ஸ்மேன்களிடம் இருந்து நம்பிக்கையை பெற்று விட்டால் போதும். அது, இது போன்ற ஆட்டங்களில் சேசிங் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும். இதே உத்வேகத்தை அடுத்து வரும் போட்டிகளுக்கும் முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியம்.

உடல்நலக்குறைவால் (டெங்கு காய்ச்சல்) சில ஆட்டங்களை தவற விட்டது ஏமாற்றமாக இருந்தது. அதில் இருந்து மீண்டு களம் திரும்பியது உற்சாகம் அளிக்கிறது. உடல் நலம் பாதிப்பால் எடை குறைந்து விட்டேன். ஆனால் அதே உடல் எடையை மீண்டும் எட்டி விடுவேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கில் கூறினார்.


Next Story