டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார் - சுனில் கவாஸ்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
டெல்லி,
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 2 ரன்கள் மற்றும் 2வது இன்னிங்சில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில், சுப்மன் கில்லுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுடன் ஒப்பிடும்போது டெஸ்ட் கிரிக்கெட் சற்று வித்தியாசமானது. பந்தில்தான் வித்தியாசம் உள்ளது.
வெள்ளை பந்துடன் ஒப்பிடும்போது டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்து காற்றிலும், ஆடுகளத்திலும் சற்று விலகி செல்லும். சிவப்பு பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆகும். அதை சுப்மன் கில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.