முதல் ஒருநாள் போட்டி: ஸ்மிருதி மந்தனா அதிரடி- இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி


முதல் ஒருநாள் போட்டி: ஸ்மிருதி மந்தனா அதிரடி- இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
x

Image Tweeted By @BCCIWomen

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது

ஹோவ்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக எம்மா லாம்ப் மற்றும் டாமி பியூமண்ட் களமிறங்கினர்.

எம்மா லாம்ப் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்னா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது. அவரை தொடர்ந்து சோபியா டன்க்லி களமிறங்கினார். அவர் களமிறங்கிய சிறிது நேரத்தில் டாமி பியூமண்ட் 7 ரன்களில் கோஸ்வாமி பந்துவீச்சில் எல்பிடபியூ ஆனார்.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் இங்கிலாந்து வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சோபியா டன்க்லி 29 ரன்கள், ஆலிஸ் கேப்ஸி 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 128 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

பின்வரிசையில் டேனி வியாட்- ஆலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் ஜோடி அபாரமாக விளையாடி அணியின் ரன் கணக்கை உயர்த்தினர். டேனி வியாட் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. ஆலிஸ் டேவிட்சன் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டும், கோஸ்வாமி, மேக்னா சிங், ராஜேஸ்வரி, ஹர்லீன் தலா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- ஷபாலி வர்மா களமிறங்கினர். ஷபாலி வர்மா 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து விக்கெட் கீப்பர் யாசிகா களமிறங்கினார். மந்தனா- யாசிகா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். மந்தனா- யாசிகா இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார். யாசிகா 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சார்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்- மந்தனாவுடன் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 99 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 91 ரன்கள் குவித்தார்.

இறுதியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்- ஹர்லீன் தியோல் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய மகளிர் அணி 44.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 232 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஹர்மன்ப்ரீத் கவுர் 74 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Next Story