அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார் சுரேஷ் ரெய்னா ...!!


அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார் சுரேஷ் ரெய்னா ...!!
x
தினத்தந்தி 6 Sep 2022 7:46 AM GMT (Updated: 6 Sep 2022 7:49 AM GMT)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "எனது நாட்டையும் உ.பி. மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். பிசிசிஐ, உ.பி. கிரிக்கெட் (UPCAC) சென்னை ஐ.பி.எல், ராஜீவ் சுக்லா மற்றும் எனது ரசிகர்கள் அனைவரின் ஆதரவிற்கும் எனது திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று அதில் சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார்.

ரெய்னா 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். குறுகிய காலத்திற்கு அணிக்கு கேப்டனாக இருந்த பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்காக ரெய்னா 226 ஒருநாள் போட்டிகளில் 5615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1605 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்டில் அறிமுகத்தில் சதம் அடித்த ரெய்னா, ஆட்டத்தின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார், மேலும் அவரது சதங்கள் வெளிநாடுகளில் அடிக்கப்பட்டன.

12 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) முதுகெலும்பாக இருந்த ரெய்னா, ஐபிஎல் வரலாற்றில் 205 ஆட்டங்களில் 5,528 ரன்களுடன் அதிக ரன்களை எடுத்தவர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். சிஎஸ்கே அணிக்காக மட்டும் 4,687 ரன்கள் எடுத்துள்ளார்.

முன்னதாக ஐபிஎல் 13ஆவது சீசன் கொரோனா தாக்கம் காரணமாக அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சுரேஷ் ரெய்னா, திடீரென்று அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார். சிஎஸ்கே நிர்வாகத்திற்கும், அவருக்கும் பிரச்சினை இருந்ததாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் அடுத்த சீசனில் ரெய்னா சிஎஸ்கேவுக்காக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக ரெய்னா விளையாடியபோது, அவர் பெரிய ஸ்கோர்களை அடிக்கவில்லை. இதனால், அடுத்து மெகா ஏலத்திற்கு முன் ரெய்னாவை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்கவில்லை. வேறு எந்த அணியும் ரெய்னாவை வாங்கவில்லை. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றிய ரெய்னா, சமீபத்தில் மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினார். பயிற்சியின்போது அவர் சிக்ஸர்களை பறக்கவிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது.

இந்நிலையில், ரெய்னா இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை பெற்றுவிட்டு, வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





Next Story