சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்; தொடரை கைப்பற்ற இலங்கைக்கு 229 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா...!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி சதம் அடித்து அசத்தினார்.
ராஜ்கோட்,
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது அட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருக்கிறது.
இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியிம் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை அணியில் பனுகா ராஜபக்சேவுக்கு பதிலாக அவிஷ்கா பெர்ணாண்டோ இடம் பிடித்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்தப்போட்டியை கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நிலையில் இறங்கிய இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் இஷன் கிஷன் முதல் ஓவரிலேயே 1 ரன் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து ராகுல் திரிபாதி களம் இறங்கினார். பவர்பிளே வரை அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 16 பந்தில் 35 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இதையடுத்து கில்லுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய சூர்ய குமார் யாதவ் மைதானத்தின் நாலாப்புறமும் சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைந்தார. அதிரடியாக ஆடிய அவர் 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மறுபுறம் சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில் 36 பந்தில் 46 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 45 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தனது 3வது சதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் குவித்தார். இதையடுத்து தொடரை கைப்பற்ற இலங்கை அணிக்கு 229 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.