டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு


டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச  முடிவு
x

Image Courtesy: ICC Twitter

நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக் முன்னேறும்.

இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை. இந்த நிலையில் தொடரில் இன்று குரூப்1-ல் முக்கியமான இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் அடிலெய்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை பந்தாடியது. நியூசிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் இலங்கையை எளிதில் தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.

5 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் வகிக்கும் நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இன்றி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். தோல்வி கண்டாலும் அந்த அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு லேசாக ஒட்டிக்கொண்டிருக்கும். அதாவது ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானிடம் தோற்றால் நியூசிலாந்துக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும்.

ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி முதலாவது ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து அணிக்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது. கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. 3 புள்ளிகள் பெற்றுள்ள அயர்லாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு முடிந்து போய்விட்டது.

இருப்பினும் அந்த அணி முதல் சுற்றில் வெஸ்ட்இண்டீசுக்கும், சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது போல் நியூசிலாந்து அணிக்கும் 'வேட்டு ' வைக்க ஆர்வமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story