டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ராகுல்-சூர்யகுமார் யாதவ் அதிரடி - ஆஸ்திரேலியாவுக்கு 187 ரன்கள் இலக்கு


டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ராகுல்-சூர்யகுமார் யாதவ் அதிரடி - ஆஸ்திரேலியாவுக்கு 187 ரன்கள் இலக்கு
x

Image Courtesy: BCCI Twitter

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

பிரிஸ்பேன்,

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது. நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி கே.எல்.ராகுல் , ரோகி சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரகளாக களம் புகுந்தனர். இதில் ராகுல் அதிரடியாக மட்டையை சுழற்றினார். அவர் பவுண்டரி மற்றும் சிக்சர்கள் விளாசி ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய அவர் 33 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ரோகித் 15 ரன்னுக்கும், அடுத்து வந்த கோலி 19 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதையடுத்து சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் பாண்ட்யா 2 ரன்னுக்கும், தினேஷ் கார்த்திக் 20 ரன்னுக்கும், அவுட் ஆகினர். இதையடுத்து அக்சர் பட்டேல் சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 33 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.


Next Story