டி20 உலகக்கோப்பை:- ரோகித்துடன் அந்த 2 வீரர்கள் வெற்றிக்கு முக்கியமானவர்கள் - தவான்


டி20 உலகக்கோப்பை:- ரோகித்துடன் அந்த 2 வீரர்கள்  வெற்றிக்கு முக்கியமானவர்கள் - தவான்
x

image courtesy: AFP

இந்தியாவுக்கு இம்முறை ரோகித் சர்மா உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் என்று ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்க உள்ளது.

கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

இந்நிலையில் ரோகித் சர்மாவிடம் ஏகப்பட்ட அனுபவம் இருப்பதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். எனவே அந்த அனுபவத்தை வைத்து இந்தியாவுக்கு இம்முறை ரோகித் சர்மா உலகக் கோப்பையை வென்று கொடுப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கு உதவியாக விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் துணையாக நிற்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"கண்டிப்பாக உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு நிறைய அழுத்தம் இருக்கும். ரோகித் சர்மா மிகவும் அனுபவமிக்கவர். எனவே அவருடைய அனுபவம் உதவி செய்யும் என்று நான் உறுதியாக சொல்வேன். அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பது அவருக்கு தெரியும். அதைப் பயன்படுத்தி இந்தியா வெற்றிக்கான வண்ண நிறத்துடன் வெளிவரும்.

ரோகித்தை தவிர்த்து விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானவர்கள் என்று நான் கருதுகிறேன். விராட் கோலி சேஸ் மாஸ்டர். அவர் களத்தில் இருப்பதே எதிரணிகளின் நம்பிக்கையை குலைக்கக்கூடியதாகும். பும்ரா தற்சமயத்தில் 3 விதமான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய உலகின் சிறந்த பவுலர். எனவே இந்தியா உலகக்கோப்பையை வெல்வதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்" என்று கூறினார்.


Next Story
  • chat