ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணி: தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்


ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணி: தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
x

விராட் கோலியின் பிறந்த நாளான இன்று, புதிதாக அவர் ஏதேனும் சாதனை நிகழ்த்துவாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொல்கத்தா,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அசைக்க முடியாத ஒரே அணியாக இந்தியா வலம் வருகிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை என்று வரிசையாக போட்டு தாக்கிய இந்தியா முதல் அணியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 442 ரன்கள்), கேப்டன் ரோகித் சர்மா (1 சதம், 2 அரைசதம் உள்பட 402 ரன்கள்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில்லும், பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (15 விக்கெட்), முகமது ஷமி (14), முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜாவும் அசத்தி வருகிறார்கள்.



தென்ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளை பதம் பார்த்த தென் ஆப்பிரிக்கா தனது 3-வது லீக் ஆட்டத்தில் இலக்கை விரட்டுகையில் நெதர்லாந்திடம் 38 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் டி காக் 4 சதங்களுடன் 545 ரன்கள் சேர்த்து ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார். மார்க்ரம் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 362 ரன்கள்), வான்டெர் டஸன் (2 சதம், ஒரு அரைசதத்துடன் 353 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (ஒருசதம், ஒரு அரைசதம் உள்பட 315 ரன்கள்), டேவிட் மில்லர் ஆகியோரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். பந்து வீச்சில் மார்கோ யான்சென் (16 விக்கெட்), ஜெரால்டு கோட்ஜி (14), ரபடா, கேஷவ் மகராஜ், இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி ஆகியோரும் கவனம் ஈர்த்துள்ளனர்.



இந்தியாவின் ஆதிக்கத்துக்கு அணை போட்டு புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க தென்ஆப்பிரிக்க அணி தீவிரமாக முயலும். வலுவான பேட்டிங், பந்து வீச்சை கொண்ட இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 90 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் தென்ஆப்பிரிக்கா 50 ஆட்டத்திலும், இந்தியா 37 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் 5 முறை மோதியதில் 3-ல் தென்ஆப்பிரிக்காவும், 2-ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. அதேநேரத்தில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்க அணி, இந்தியாவை வீழ்த்தியது கிடையாது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ரபடா, கேஷவ் மகராஜ், இங்கிடி, ஜெரால்டு கோட்ஜி அல்லது தப்ரைஸ் ஷம்சி.




பிறந்த நாளில் சாதிக்க காத்திருக்கும் விராட் கோலி..?

விராட்கோலிக்கு இன்று 35-வது பிறந்த நாளாகும். அவர் பிறந்த நாள் பரிசாக சதம் அடித்து தெண்டுல்கரின் (ஒருநாள் போட்டியில் 49 சதம்) சாதனையை சமன் செய்வாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் இன்றைய போட்டியை நேரில் காண ஸ்டேடியத்துக்கு வரும் ரசிகர்களுக்கு விராட்கோலியின் முகம் பொறித்த முகமூடி வழங்க பெங்கால் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.


Next Story