இந்திய அணி பாகிஸ்தானை பார்த்து பந்துவீச்சு தாக்குதலை வடிவமைத்துள்ளது - பாக். முன்னாள் வீரர்


இந்திய அணி பாகிஸ்தானை பார்த்து அவர்களின் பந்துவீச்சு தாக்குதலை வடிவமைத்துள்ளது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

லாகூர்,

இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை 3-0 மற்றும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதில் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து சுப்மன் கில்லின் சதத்துடன் 234 ரன்கள் குவித்தது. இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நியூசிலாந்து இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணி பந்துவீச்சு தாக்குதலை பாகிஸ்தானை பார்த்து வடிவமைத்துள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரரும், முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவருமான ரமீஸ் ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணி பாகிஸ்தானை பார்த்து அவர்களது பந்துவீச்சு தாக்குதலை வடிவமைத்துள்ளது. அவர்கள் அவ்வாறு வடிவமைத்துள்ளதாக நான் நினைக்கிறேன். இந்தியாவின் உம்ரான் மாலிக்கிடம், ஹாரிஸ் ரால்ப் போல் வேகம் உள்ளது. பாகிஸ்தானின் ஷாகின் அப்ரியை போல் இடது கையால் அர்ஷ்தீப் சிங் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

மிடில் ஓவர்களில் பாகிஸ்தானின் வாசிம் ஜூனியர் எவ்வாறு பந்துவீசுகிறாரோ அதே போல் அங்கு பாண்ட்யா வீசுகிறார். ஷிவம் மாவியும் ஒரு சிறந்த துணை பந்துவீச்சாளராக உள்ளார். பாகிஸ்தானை விட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு அருமையாக உள்ளது. இரு அணிகளும் விளையாடும் போதெல்லாம் பாகிஸ்தான் அணி எதை மேம்படுத்த வேண்டும் என்பதை நான் பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story