'பேட்டிங் வரிசை கவனிக்க வேண்டிய ஒன்று'- இந்திய பயிற்சியாளர் டிராவிட்


பேட்டிங் வரிசை  கவனிக்க வேண்டிய ஒன்று- இந்திய பயிற்சியாளர் டிராவிட்
x

image courtesy; AFP

தினத்தந்தி 14 Aug 2023 7:33 AM GMT (Updated: 14 Aug 2023 7:45 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.

புளோரிடா,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அதில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று நடந்தது. அதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தோல்விக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில்,

பேட்டிங் துறையில் ஏற்பட்ட தோல்விகளை ஒப்புக்கொள்கிறோம். நீண்ட காலமாக இந்திய அணி சந்தித்து வரும் பேட்டிங் துறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது. வரிசையில், 7-வது பேட்டிங் செய்யும் அக்சர் பட்டேல், இந்திய அணியின் கடைசி பேட்டிங் செய்யும் திறன் உள்ளவராக உள்ளார்.

அதே வேளையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடைசி விக்கெட்டாக களம் இறங்கும் அல்சாரி ஜோசப் பெரிய ஷாட்களை அடிக்கக்கூடிய வீரராக உள்ளார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாகல் மற்றும் முகேஷ் குமார் போன்றவர்கள் பேட்டிங்கில் நம்பிக்கை வைக்க முடியாத பந்து வீச்சாளர்களாகவே உள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் அவர், 'எங்கள் அணியைப் பொறுத்தவரை பேட்டிங் வரிசையை கண்டறிவது முக்கிய வேலையாகும். பேட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட அளவு பிரச்சனை உள்ளது. எங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறோம். இந்தத் தொடர் நமக்குக் காட்டிய ஒன்று பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்த வேண்டும்' என கூறியுள்ளார்.


Next Story