'நடப்பு ஐ.பி.எல். தொடர் எனது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது' - ரிங்கு சிங் பேட்டி
இனி வழக்கமான பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்தார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. இதில் நிகோலஸ் பூரனின் அதிரடியான அரைசதத்தின் (58 ரன், 30 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) பங்களிப்போடு லக்னோ நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தாவுக்கு கடைசி ஓவரில் 21 ரன் தேவைப்பட்டது. யாஷ் தாக்குர் வீசிய இறுதி ஓவரில் ரிங்கு சிங் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய போதிலும் அந்த ஓவரில் மொத்தம் 19 ரன்களே கிடைத்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் வெற்றி வசமானது. ரிங்கு சிங் 67 ரன்களுடன் (33 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் கொல்கத்தா அணியில் அதிக ரன்கள் குவித்தவரான 25 வயதான ரிங்கு சிங் (4 அரைசதம், 29 சிக்சர் உள்பட 474 ரன்) நிருபர்களிடம் கூறுகையில், 'இது போன்ற சீசன் அமையும் எந்த வீரருக்கும் சிறப்பாகத் தான் இருக்கும். இதனால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கவில்லை. இனி வழக்கமான பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனது ரன் குவிப்பை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். குஜராத் டைட்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக 5 சிக்சர் அடித்த பிறகு உண்மையிலேயே எனக்கு நிறைய மரியாதை கொடுக்கிறார்கள். நான் யார் என்பதை பலர் அறிந்துள்ளனர். நடப்பு ஐ.பி.எல். தொடர் எனது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இது எல்லாம் மகிழ்ச்சி தந்தாலும், எங்கள் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது வருத்தமே.
இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 21 ரன் தேவைப்பட்ட போது, அந்த 5 சிக்சர் அடித்த இன்னிங்ஸ் மனதில் ஓடியது. அதே போன்று நொறுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு பந்தை தவறவிட்டு விட்டேன். இல்லாவிட்டால் வெற்றி பெற்றிருப்போம்' என்றார்.