இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் - ஆக்லாந்தில் இன்று நடக்கிறது


இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் - ஆக்லாந்தில் இன்று நடக்கிறது
x

இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

20 ஓவர் தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தினார். ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் அதிகமான இளம் வீரர்களுடன் இந்தியா களம் இறங்குகிறது.

ஆனாலும் சுப்மான் கில், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் என்று அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

அதே சமயம் உலகின் 'நம்பர் ஒன்'அணியாக திகழும் நியூசிலாந்து, வலுவான அணியாக அடியெடுத்து வைக்கிறது. டிவான் கான்வே, டாம் லாதம், டேரில் மிட்செல், சான்ட்னெர், டிம் சவுதி நல்ல பார்மில் உள்ளனர். 20 ஓவர் தொடரை இழந்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இருக்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.


Next Story