தோனி என்கிற பெயர் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்துள்ளது - சுரேஷ் ரெய்னா


தோனி என்கிற பெயர் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்துள்ளது -  சுரேஷ் ரெய்னா
x

image courtesy: PTI

சச்சினுக்கு பிறகு தோனிக்குத்தான் அதே அளவு ரசிகர்களின் அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். இவரது தலைமையிலேயே சென்னை அணி இதுவரை 5 கோப்பைகளையும் வென்றுள்ளது.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பின் காரணமாக தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சுகள் அதிகம் எழுந்து வந்த வேளையில் கடந்த ஆண்டு இறுதியில் தோனி ரசிகர்களின் அன்பிற்கும், பாசத்திற்காகவும் தான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர்தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு சி.எஸ்.கே. அணி விளையாடப்போகும் போட்டிகளை காண ரசிகர்கள் லட்சக்கணக்கில் நேரில் படை எடுக்கவும் காத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு தோனியின் மீது ரசிகர்கள் அன்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவிடம் எந்த வீரருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா கூறுகையில்:-

'நான் விளையாடும்போது சச்சின் டெண்டுல்கருக்கு அதிக அளவில் ரசிகர்கள் அன்பு கொடுப்பார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடியிருந்தாலும் தோனிக்குத்தான் அதே அளவு ரசிகர்களின் அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது. தோனி என்கிற பெயர் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்துள்ளது' என்று கூறினார்.


Next Story