ஐ.பி.எல். 'பிளே-ஆப்' சுற்று டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடக்கம்
ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டம் வருகிற 21-ந் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து 'பிளே-ஆப்' சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. இதில் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் (லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்) வருகிற 23-ந் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் (புள்ளிபட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள்) 24-ந் தேதியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சென்னையில் நடைபெறும் இந்த இரண்டு பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டர்களில் விற்பனை செய்வதால் ஏற்படும் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது.
இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் 26-ந் தேதியும், இறுதிப்போட்டி 28-ந் தேதியும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.