தோல்வி குறித்து பேச ஏராளமான விஷயங்கள் இந்த ஒரே போட்டியில் நடைபெற்று விட்டன - பாண்டிங் ஆதங்கம்


தோல்வி குறித்து பேச ஏராளமான விஷயங்கள் இந்த ஒரே போட்டியில் நடைபெற்று விட்டன - பாண்டிங் ஆதங்கம்
x

image courtes: PTI

தினத்தந்தி 4 April 2024 11:43 AM GMT (Updated: 4 April 2024 12:10 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினம்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் டெல்லி பந்துவீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறக்கவிட்டனர். இதன் மூலம் கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 272 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன்களாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 17.2 ஓவர்களில் 166 ரன்கள் மட்டுமே அடித்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் இந்த போட்டியில் தங்களது அணி வீரர்கள் விளையாடிய விதத்தில் செய்த பல்வேறு விசயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிப்படையாக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

"தற்போதைய நிலையில் எங்களது வீரர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் கடினம். இந்த ஆட்டத்தின் முதல் பாதியின்போது நான் மிகவும் சங்கடத்திற்கு உள்ளானேன். ஏனெனில் எங்களது அணியின் பவுலர்கள் ஏகப்பட்ட ரன்களை வாரி வழங்கி விட்டனர். அதோடு நாங்கள் 17 ஓவர்களை வீசியபோதே இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டதால் கடைசி இரண்டு ஓவர்களில் வெளிவட்டத்தில் நான்கு வீரர்களுடன் பீல்டிங் செய்ய வேண்டியிருந்தது.

அதேபோன்று பேட்டிங்கிலும் பெரிய சறுக்கலையும், ஏகப்பட்ட பின்னடைவையும் சந்தித்திருக்கிறோம். இப்படி இந்த தோல்வி குறித்து பேச ஏராளமான விசயங்கள் இந்த ஒரே போட்டியில் நடைபெற்று விட்டன. அவைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. பல்வேறு விஷயங்கள் குறித்து அணி மீட்டிங்கில் பேச இருக்கிறோம். இதனை உடனடியாக சரி செய்து முன்னோக்கி செல்ல வேண்டும். அதனால் வெளிப்படையான ஆலோசனை வீரர்கள் அறையில் நடக்க இருப்பது உறுதி" என்று கூறினார்.


Next Story