வெற்றிக்கு இவர்கள்தான் காரணம் - புகழாரம் சூட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித்


வெற்றிக்கு  இவர்கள்தான் காரணம் - புகழாரம் சூட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித்
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 4 Jan 2024 1:28 PM GMT (Updated: 4 Jan 2024 2:05 PM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : 'இந்த வெற்றிக்கு எங்களது அணியின் வேகப்பந்து வீச்சார்களான சிராஜ், பும்ரா, முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சே காரணம். செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் செய்த தவறை நாங்கள் புரிந்துகொண்டு அதிலிருந்து சில பாடங்களை கற்று தற்போது மிகச்சிறப்பாக மீண்டு வந்துள்ளோம். அதிலும் குறிப்பாக எங்களது அணியின் பவுலர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர்.

இந்த மைதானத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். சிராஜ் இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசினார். அவர் இதேபோன்று எப்பொழுதுமே ஒரு மிகச்சிறப்பான ஸ்பெல்லை அணிக்காக வழங்கி வருகிறார்' என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

மேலும் அவர் கூறுகையில்,' நாங்கள் முதல் இன்னிங்சில் 100 ரன்கள் வரை முன்னிலை பெற்றது மகிழ்ச்சி. ஆனாலும் கடைசி 6 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இது போன்ற குறுகிய போட்டிகளில் இப்படித்தான் நடக்கும் இருந்தாலும் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். ஆசிய கண்டத்திற்கு வெளியே நாங்கள் பல போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதில் நமது அணி சிறப்பாகவும் செயல்பட்டுள்ளது.

இந்த தென் ஆப்பிரிக்க தொடரிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இந்த தொடரை நம்மால் கைப்பற்ற முடியவில்லை என்றாலும் சமனில் முடித்ததை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா ஒரு பலமான அணி எப்போதுமே நமக்கு அவர்கள் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்கள். இந்த தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடியது' என்று கூறினார்.


Next Story