முதல் 5-6 ஓவர்களிலேயே வெற்றியை எங்களிடம் இருந்து பறித்து விட்டனர் - தோல்வி குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து..!


முதல் 5-6 ஓவர்களிலேயே வெற்றியை எங்களிடம் இருந்து பறித்து விட்டனர் - தோல்வி குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து..!
x

image courtesy; PTI 

இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

கேப்டவுண்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்திருந்த வேளையில் மழை பெய்தது. அதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மழை நிற்க சற்று நேரம் ஆனதால் இந்திய அணியின் பேட்டிங் அத்துடன் நிறுத்தப்பட்டது. இந்திய அணி தரப்பில் ரிங்கு சிங் 68 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் அடித்தனர்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு டிஎல்எஸ் முறையில் 15 ஓவர்களில் 152 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் சார்பாக துவக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 49 ரன்களும், மார்க்ரம் 30 ரன்களும் அடித்து அணி வெற்றி பெற உதவினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில்;- 'முதல் பாதி முடிந்ததும் இந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்றே நினைத்தோம். ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் முதல் 5-6 ஓவர்களிலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டனர். இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. பயமற்ற இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த வேண்டும் என்று நான் வீரர்களிடம் கூறிக்கொண்டே இருந்தேன்.

மேலும் போட்டியின் சூழல் எவ்வாறு இருந்தாலும் களத்திற்கு சென்று நமது திறமையை காண்பிக்க வேண்டும் என்பதை மட்டுமே நான் வீரர்களிடம் கூறிக்கொண்டே இருந்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் நமது அணியின் வீரர்கள் மிகச்சிறப்பாகவே செயல்பட்டனர். அதோடு இரண்டாம் பாதியில் பந்து ஈரமாக இருந்ததால் கிரிப் செய்ய முடியவில்லை. இது போன்ற வெளிநாட்டு சூழலில் விளையாடுவது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன். அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறோம் 'என்று கூறினார்.


Next Story