எங்களின் முதல் இலக்கு இதுதான்..!! இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா


எங்களின் முதல் இலக்கு இதுதான்..!! இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா
x

வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் பிரமிக்கும் வகையில் உள்ளது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் விளாசினர். பின்னர் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதனைத்தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, "அரையிறுதி சுற்றுக்கு நாங்கள் தகுதி பெற்று விட்டோம் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எங்களுடைய முதல் இலக்கு இதுவாகத்தான் இருந்தது. அதிலிருந்து அரை இறுதிப் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து அணுக வேண்டும்.

லீக் சுற்றில் முதல் ஏழு ஆட்டங்களில் நாங்கள் எவ்வாறு விளையாடினோம் என்பது பாராட்டுக்குரியது. அணியின் பல வீரர்கள் இந்த வெற்றிக்கு தங்களுடைய சிறப்பான பங்களைப்பை வெளிப்படுத்தி உள்ளனர். முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்து விளையாடுவது மிகவும் சவாலான விஷயமாகவே இருந்தது. இது போன்ற ஒரு ஆட்டத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.

பேட்ஸ்மேன்களுக்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள். அதேபோல் வேகபந்துவீச்சாளர்கள் செயல்பாடுகளும் பிரமிக்கும் வகையில் இருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் இன்று தன்னுடைய தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் யாரென்று நிரூபித்து விட்டார். எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவர் செயல்பட்டார். தொடர்ந்து அவர் கடின உழைப்பை பயிற்சியில் செய்து வருகிறார். அதன் வெளிப்பாட்டை தான் நாம் இன்று கண்டோம்.

சிராஜை பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் திறமை வாய்ந்த வீரர். அவர் எப்போதெல்லாம் சிறப்பாக பந்து வீசுகிறாரோ அது எங்களுக்கு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஒரு அணியாக நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். கடந்த போட்டியில் சூரியகுமார் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் போன்றோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவது, வேக பந்துவீச்சாளர்கள் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது எல்லாம் நல்ல விஷயமாக பார்க்கின்றேன்.

டிஆர்எஸ் முடிவை எடுப்பது குறித்து கே.எல்.ராகுல் மற்றும் பவுலர்களிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டேன். அவர்கள் தான் எனக்காக முடிவெடுக்க வேண்டும். சில சமயம் சரியாக இருக்கும், சில சமயம் தவறாக கூட போகலாம். அடுத்தது தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறோம். அவர்களும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். இது நிச்சயம் நல்ல ஆட்டமாக அமையும் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.


Next Story