எங்கள் அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்..!! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்


எங்கள் அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்..!!  பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
x

கோப்புப்படம்

ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா அணி, நடப்பு தொடரில் தனது 5-வது வெற்றியை பதிவுசெய்தது.

சென்னை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 26வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்ரிக்கா அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சவூத் சக்கீல் 52 ரன்களும், பாபர் அசாம் 50 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் பவுமா 28 ரன்னிலும், டி காக் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த வான் டர் டசன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. கிளாசென் 12 ரன்னிலும், டேவிட் மில்லர் 29 ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், அனுபவ வீரரான எய்டன் மார்க்ரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் உயர முக்கிய பங்காற்றினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்க்ரம் 91 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற 2 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டம் பரபரப்பானது. கடைசியில் தென் ஆப்பிரிக்க அணி ஒன்று, இரண்டு ரன்களாக எடுத்து வெற்றி இலக்கை கடந்தது. இதன் மூலம் பரபரப்பான ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்ஆப்பிரிக்க அணி, நடப்பு தொடரில் தனது 5-வது வெற்றியை பதிவுசெய்தது. அத்துடன் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல்இடத்திற்கு முன்னேறியது.

இந்தநிலையில், தென்ஆப்ரிக்கா அணியுடனான எங்கள் அணியின் தோல்விக்கு இதுதான் காரணம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "நூழிலையில் வெற்றியை தவறவிட்டுவிட்டோம். தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த தோல்வி மிகவும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நாங்கள் நன்றாகப் போராடினோம். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், வெற்றிக்காக கடைசி வரை கடுமையாக போராடியது மகிழ்ச்சியளிக்கிறது.

பேட்டிங்கில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பேட்டிங்கில் நாங்கள் சற்று குறைவாக ரன்கள் எடுத்திருந்தாலும், எங்கள் பந்துவீச்சாளர்களின் கடும் போராட்டத்தினால் தான் எங்களால் இந்த வெற்றியை கடைசி வரை எடுத்துவர முடிந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக முடிவு எங்கள் பக்கம் இல்லை (drs பற்றி), இது விளையாட்டின் ஒரு பகுதி.

ஹாரிஸ் ரவூப் வீசிய ஓவரில் அம்பயர் அவுட் கொடுத்திருந்தால் போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் நிலைத்திருக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதனை தவறவிட்டோம். ஆனால் அது குறித்து கவலை இல்லை. விளையாட்டில் இது போன்று நடப்பது இயல்பு தான். எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தானிற்காக எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி கொடுப்போம்" என்று பாபர் அசாம் கூறினார்.


Next Story