டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 லீக் ஆட்டங்கள்; நெல்லை-சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம்-மதுரை அணிகள் மோதல்..!


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 லீக் ஆட்டங்கள்; நெல்லை-சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம்-மதுரை அணிகள் மோதல்..!
x

Image Courtesy: @TNPremierLeague

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 2 லீக் ஆட்டங்களில் நெல்லை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம்-மதுரை அணிகள் மோதுகின்றன.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் கோவை, நத்தம் பகுதி ஆட்டங்கள் முடிந்து விட்டன. தோல்வியே சந்திக்காத ஒரே அணியான அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்தக்கட்ட ஆட்டங்கள் சேலம் வாழப்பாடியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. பிற்பகல் 3.15 மணிக்கு நடக்கும் 13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சுடன் பலப்பரீட்சையில் குதிக்கிறது.

என்.ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி அதில் 2-ல் வெற்றியும் (சேலம், திருப்பூருக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (கோவை, திண்டுக்கல்லுக்கு எதிராக) கண்டுள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் வாய்ப்பை எட்ட முடியும் என்ற நெருக்கடி கில்லீசுக்கு உருவாகியுள்ளது.

திண்டுக்கல்லுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கில்லீஸ் அணி நெருங்கி வந்து 1 ரன் வித்தியாசத்தில் கோட்டை விட்டது. தொடக்க ஆட்டக்காரர் பிரதோஷ் ரஞ்சன் பால் முதல் ஆட்டத்தில் 88 ரன்கள் குவித்தார். அடுத்த 3 ஆட்டங்களில் சோபிக்கவில்லை.

இதே போல் ஜெகதீசன், ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவ், சசிதேவ் ஆகியோரும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். பாபா அபராஜித் (4 ஆட்டத்தில் 161 ரன்) மட்டும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா (7 விக்கெட்) கைகொடுக்கிறார். ஹரிஷ்குமார், சிலம்பரசன், ரோகித், சஞ்சய் யாதவ் உள்ளிட்டோரும் ஒருசேர மிரட்டினால் எழுச்சி பெறலாம்.

நெல்லை ராயல் கிங்ஸ் 3 வெற்றி (மதுரை, கோவை, சேலத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (திருப்பூருக்கு எதிராக) என்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. அந்த அணியில் அஜிதேஷ் (ஒரு சதத்துடன் 185 ரன்), ஆல்-ரவுண்டர் சோனு யாதவ் (76 ரன் மற்றும் 5 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர்.

ஆனால் கேப்டன் அருண் கார்த்திக் தொடர்ந்து திணறுகிறார். இதுவரை 4 ஆட்டத்தில் 36 ரன் மட்டுமே எடுத்துள்ள அவர் 2 முறை டக்-அவுட்டும் ஆகியுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் மிகுந்த கவனமுடன் ஆடுவார். பந்து வீச்சில் பொய்யாமொழி, லக்ஷய் ஜெயின், மோகன் பிரசாத் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இவ்விரு அணிகளும் இரண்டு முறை மோதின. இதில் லீக்கில் நெல்லையும், 'பிளே-ஆப்' சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசும் வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.

இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது.

முதல் இரு ஆட்டங்களில் நெல்லை, திண்டுக்கல்லிடம் உதை வாங்கிய மதுரை அணிக்கு இது வாழ்வா-சாவா மோதலாகும். இதில் தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டியது தான். அதே சமயம் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் உள்ள சேலம் அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.


Next Story