டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: மாமல்லபுரத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது


டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: மாமல்லபுரத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது
x

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மாமல்லபுரத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.

சென்னை,

8 அணிகள் இடையிலான 7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. தக்கவைக்கப்பட்டவர்கள் தவிர மற்ற வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுகிறார்கள். தக்கவைக்கப்படும் வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டனர்.

தக்கவைக்கப்படும் 'ஏ' பிரிவு வீரர்களின் (சர்வதேச போட்டியில் ஆடியவர்கள்) விலை ரூ.10 லட்சமாகவும், 'பி' பிரிவு வீரர்களின் (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட சீனியர் முதல் தர போட்டியில் ஆடியவர்கள்) விலை ரூ.6 லட்சமாகவும், 'சி' பிரிவு வீரர்களின் (ஏ, பி, பிரிவில் இடம் பெறாதவர்கள், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 30 ஆட்டங்களுக்கு மேல் ஆடியவர்கள்) விலை ரூ.3 லட்சமாகவும், 'டி' பிரிவு வீரர்களின் (மற்ற வீரர்கள்) விலை ரூ.1½ லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் (பி பிரிவு), மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சசிதேவ் ( சி பிரிவு) ஆகியோரை தக்கவைத்தது.

இதே போல் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆர்.அஸ்வினையும் (ஏ பிரிவு), திருப்பூர் தமிழன்ஸ் அணி துஷார் ரஹிஜாவையும் (டி), கோவை கிங்ஸ் அணி ஷாருக்கான் (பி), சுரேஷ் குமார் (டி) ஆகியோரையும், நெல்லை ராயல் கிங்ஸ் அஜிதேஷ் (பி), கார்த்திக் மணிகண்டன் (டி) ஆகியோரையும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி கணேஷ் மூர்த்தியையும் (சி), மதுரை பாந்தர்ஸ் கவுதமையும் (டி) வசப்படுத்தியது. திருச்சி வாரியர்ஸ் அணி கைமாறி இருப்பதால் அந்த அணி இனிமேல் பால்ஸி திருச்சி என்று அழைக்கப்படும். பால்ஸி திருச்சி அணி அந்தோணி தாசை (பி) தக்கவைத்தது.

இந்த நிலையில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஹென்சஸ் நட்சத்திர ஓட்டலில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முதல் நாளில் ஏலம் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரையும், 2-வது நாளில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 943 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வீரர்களின் அடிப்படை விலை முறையே ரூ.3 லட்சம் (ஏ பிரிவு), ரூ.2 லட்சம் ( பி பிரிவு), ரூ.1 லட்சம் (சி பிரிவு), ரூ.50 ஆயிரம் (டி பிரிவு) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் 5 வீரர்களும், 'பி' பிரிவில் 57 வீரர்களும், 'சி' பிரிவில் 12 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

'டி' பிரிவில் 869 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த பட்டியலில் இருந்து அணிகளின் பரிந்துரையின் அடிப்படையில் 165 வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் விற்பனை ஆகாத வீரர்களும், 'டி' பிரிவில் எஞ்சிய வீரர்களும் துரித ஏலம் மூலம் அணிகளால் எடுக்கப்படுவார்கள்.

பிரபல டெவிவிஷன் வர்ணனையாளரான சாரு ஷர்மா வீரர்கள் ஏலத்தை நடத்துகிறார். இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உள்பட குறைந்தபட்சம் 16 முதல் அதிகபட்சமாக 20 வீரர்களை எடுக்கலாம். ஒவ்வொரு அணியும் வீரர்களை வாங்க தலா ரூ.70 லட்சம் (தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உள்பட) வரை செலவிட முடியும். இதன்படி 2 வீரர்களை தக்கவைக்க ரூ.9 லட்சம் செலவிட்டு இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இன்னும் ரூ.61 லட்சம் கையிருப்பு உள்ளது.


Next Story