புவனேஷ்வரன் அபாரம் : 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி
திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றிபெற்றது.
சேலம்,
டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் மாலை 3.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதில் கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் திருப்பூர்- திருச்சி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துஷார் ரஹேஜா, ராதாகிருஷ்ணன் களமிறங்கினர். துஷார் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 45 ரன்கள் எடுத்தார். அடுத்துவந்த சாய்கிஷோர் அதிரடி காட்டினார். அவர் 4 சிக்சர், 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாலசந்தர் அனிருத் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் தன் பங்குக்கு 31 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணியின் சார்பில் கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் கே.ராஜ்குமார் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த ஜோடியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ 20 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மோனிஷ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், கே. ராஜ்குமார் 22 ரன்களும் , ஆர். ராஜ்குமார் 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக டேர்ல் பெராரியோவுடன் ஆண்டனி தாஸ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெராரியோ 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஆண்டனி தாஸ் 25 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஜாபர் ஜமால் அதிரடி காட்டினார். இதனால் ரன் ரேட் உயர்ந்த போதிலும், வெற்றிக்கு அது உதவவில்லை. தொடர்ந்து ஜபார் ஜமால் 30 (14) ரன்களுக்கு கேட்ச் ஆனார்.
இறுதியில் பிரான்சிஸ் ரோகின்ஸ் 1 ரன்னும், சிலம்பரசன் 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் திருச்சி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. திருப்பூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வரன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றிபெற்றது.