உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்


உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்
x

Image Courtesy: Twitter 

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆறு விக்கெட்டுகள் விழுந்து ரோவ்மன் பவல் வந்து இரண்டு சிக்ஸர் அடித்ததும் நாங்கள் போட்டியில் இருப்பதாக உணர்ந்தோம்.

அதன் பிறகு ஜாஸ் பட்லர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்தார். அதோடு எங்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. உண்மையிலேயே இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். குறிப்பாக சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இந்த மைதானம் கை கொடுத்தது. இருந்தாலும் ரோவ்மன் பவல் 2 சிக்ஸ் அடிக்க அதன் பின்னர் பட்லர் எங்களுக்கு போட்டியையும் முடித்துக் கொடுத்தார்.

கடந்த ஆறு-ஏழு ஆண்டுகளாகவே அவர் இதைத்தான் செய்து வந்தார். அவரது இந்த ஆட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு துவக்க வீரராக களமிறங்கிய பட்லர் 20-வது ஓவர் வரை நின்றால் நிச்சயம் எவ்வளவு ஸ்கோராக இருந்தாலும் அதை சேசிங் செய்து இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story