விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; சாம்பியன் பட்டம் வென்றது அரியானா


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; சாம்பியன் பட்டம் வென்றது அரியானா
x

Image Courtesy : @BCCIdomestic

தினத்தந்தி 16 Dec 2023 9:16 PM GMT (Updated: 16 Dec 2023 9:17 PM GMT)

இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக அரியானா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு- அரியானா, ராஜஸ்தான்- கர்நாடகா அணிகள் மோதின. இதில் அரியானா அணி தமிழ்நாட்டையும், ராஜஸ்தான் அணி கர்நாடகாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதையடுத்து சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் ராஜஸ்தான்- அரியானா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அன்கித் குமார் 88 ரன்களும், மேனாரியா 70 ரன்களும் குவித்தனர். நிஷாந்த் சந்து 29 ரன்களும், ராகுல் தெவாட்டியா 24 ரன்களும், சுமித் குமார் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஜீத் தோமர், 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் சதம் விளாசி அசத்தினார். இதையடுத்து 106 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மறுபுறம் குணால் சிங் ரத்தோர் அரைசதத்தைக் கடந்து 79 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ராஜஸ்தான் அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் அரியானா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் அரியானா வீரர் சுமித் குமார் தட்டிச் சென்றார்.


Next Story