விராட் கோலி அதிரடி சதம்; இலங்கை அணிக்கு 374 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா..!
இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித், சுப்மன் கில் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
கவுகாத்தி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு மோதலாக இன்று நடைபெற்று வருகிறது.
இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன்ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புகிறார்கள். கடைசி நேரத்தில் உடல்தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மறுபடியும் விலகியுள்ளார்.
இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்த தொடர் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன்ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் தங்களது திறமையை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதம் அடித்து அசத்திய இஷன் கிஷனுக்கும், கடந்த டி20 போட்டியில் சதம் அடித்து அசத்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவுக்கும் அணியில் இடம் இல்லை. அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில்லும், ஸ்ரேயஸ் அய்யரும் அணியில் இடம் பிடித்தனர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக சுப்மன் கில்லும், கேப்டன் ரோகித் சர்மாவும் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 143 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 70 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து விராட் கோலி களம் புகுந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த கேப்டன் ரோகித் 83 ரன்னில் போல்ட் ஆனார்.
இதையடுத்து கோலியுடன் ஸ்ரேயஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயஸ் அய்யர் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிசில்வா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இதையடுத்து கோலியுடன் விக்கெட் கீப்பர் ராகுல் இணைந்தார்.
சிறிது நேரம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 39 ரன்னில் அவுட் ஆனார். இதற்கிடையில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து பாண்ட்யா களம் புகுந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி கருணாரத்னேவின் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இந்நிலையில் அதிரடி ஆட்டக்காரர் பாண்ட்யா 14 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 73வது சதத்தை பதிவு செய்தார் கோலி. சதம் அடித்து அசத்திய கோலி 113 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கோலி 113 ரன்னும், ரோகித் 83 ரன்னும், கில் 70 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் ரஜிதா 3 விக்கெட்டும், மதுஷான்கா, கருணாரத்னே, ஷனகா, டிசில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி ஆட உள்ளது.