கோலியின் ஓட்டல் அறை வீடியோ வெளியான விவகாரம்- அனுஷ்கா சர்மா, வார்னர் உள்ளிட்டோர் கடும் கண்டனம்


கோலியின் ஓட்டல் அறை வீடியோ வெளியான விவகாரம்- அனுஷ்கா சர்மா, வார்னர் உள்ளிட்டோர் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:25 PM GMT (Updated: 31 Oct 2022 12:26 PM GMT)

பாலிவுட் நட்சத்திரங்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான் உள்ளிட்டோரும் வீடியோ வெளியிட்ட ரசிகருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெர்த்,

டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. சூப்பர் 12 போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்கா அணி உடன் மோதியது. இந்த போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் கிரவுன் பெர்த் ஓட்டல் அறை தங்கி உள்ளனர்.

இந்த ஓட்டலில் விராட் கோலியின் அறையில் ரசிகர் ஒருவர் கோலி இல்லாத நேரத்தில் அனுமதியின்றி நுழைந்து அவரின் அறையை வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோவால் ஆத்திரமும், அதிருப்தியும் அடைந்த விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்து வீடியோ எடுத்த ரசிகரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில், " ஓட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு சுதந்திரம் கிடைக்கும். என் தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோலியின் இந்த பதிவை தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா அந்த ரசிகருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "ரசிகர்கள் மனிதாபிமானமின்றி நடந்து கொண்ட சில சம்பவங்கள் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமானது. இது உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால் இதற்கான எல்லைக்கோடு எது" என கேள்வி எழுப்பி உள்ளார்.


அனுஷ்கா சர்மாவை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான், பிரனீதி, ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் உள்ளிட்டோரும் வீடியோ எடுத்த அந்த ரசிகருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


Next Story