உலகக் கோப்பையில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் விராட்கோலி முதலிடம்..!!


உலகக் கோப்பையில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் விராட்கோலி முதலிடம்..!!
x

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது. கோலி 5 ரன்னில் சதத்தை நழுவ விட்டார்

தர்மசாலா,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும், தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

இந்த நிலையில் இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நேற்று அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சையில் குதித்தன. இந்திய அணியில் இரு மாற்றமாக காயமடைந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டனர்.

நழுவிய கேட்ச்சுகள்

'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி டிவான் கான்வேவும், வில் யங்கும் நியூசிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். இந்திய வேகத்தாக்குதலில் திணறிய கான்வே ரன்னின்றியும், வில் யங் 17 ரன்னிலும் நடையை கட்டினர். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 12 ரன்னில் இருந்த போது கொடுத்த 'லட்டு' கேட்ச்சை ஜடேஜா கோட்டை விட்டார். மறுவாழ்வு பெற்ற ரவீந்திரா வாய்ப்பை சூப்பராக பயன்படுத்திக் கொண்டார். அவரும் டேரில் மிட்செலும் 3-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பந்து நன்கு எழும்பிச் செல்வதும், திடீரென தாழ்வாக வருவதும் என இருவிதத் தன்மையுடன் காணப்பட்டது. அதை இவர்கள் சரியாக கணித்து ரன் திரட்டினர். 20.5 ஓவர்களில் அந்த அணி 100-ஐ தொட்டது.

டேரில் மிட்செல் மீதும் அதிர்ஷ்ட காற்று வீசியது. 59 ரன்னில் அவருக்கு விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் கேட்ச்சை விட்டார். இது கொஞ்சம் கடினமானது. ஆனால் இதே மிட்செல் 69 ரன்னில் வழங்கிய எளிய கேட்ச் வாய்ப்பை பும்ரா வீணடித்தார். இவர்கள் விளையாடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 320 ரன்வரை எடுக்கும் என்று தோன்றியது.

நல்லவேளையாக இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பிரித்தார். ஸ்கோர் 178-ஆக உயர்ந்த போது ரச்சின் ரவீந்திரா 75 ரன்களில் (87 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். ரவீந்திரா- மிட்செல் இணை 3-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தனர். உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

மிட்செல் சதம்

இதன் பின்னர் நியூசிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் டேரில் மிட்செல் நிலைத்து நின்று பிரமாதப்படுத்தினார். குல்தீப் யாதவின் சுழலில் மட்டும் அவர் 3 சிக்சர்களை பறக்க விட்டார். அபாரமாக ஆடிய மிட்செல் ஒரு நாள் போட்டியில் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் கடைசி கட்டத்தில் இந்திய பவுலர்கள் அவர்களின் ரன்வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினர். டேரில் மிட்செல் 130 ரன்களில் (127 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) முகமது ஷமி வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

50 ஓவர் முடிவில் நியூசிலாந்து 273 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 10 ஓவர்களில் அந்த அணியினர் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 54 ரன் மட்டுமே எடுத்தனர். என்றாலும் பீல்டிங்கில் மட்டும் இந்தியா கச்சிதமாக செயல்பட்டு இருந்தால் நியூசிலாந்தை இதை விட குறைந்த ஸ்கோரில் மடக்கி இருக்கலாம். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

274 ரன் இலக்கு

அடுத்து 274 ரன் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் புகுந்தனர். அதிரடியால் ரசிகர்களை குஷிப்படுத்திய ரோகித் சர்மா 46 ரன்களில் (40 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), லோக்கி பெர்குசன் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஆப்ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து அவரது பேட்டின் உள்பகுதியில்பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அவரது அடுத்த ஓவரில் கில் (26 ரன்) எல்லைக்கோடு அருகே பிடிபட்டார்.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்து நேர்த்தியாக ஆடினர். நல்லநிலையை நோக்கி அணி பயணிக்க தொடங்கிய சமயத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் (33 ரன், 29 பந்து, 6 பவுண்டரி), டிரென்ட் பவுல்ட்டின் 'ஷாட்பிட்ச்' வலையில் சிக்கினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 27 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அப்போது இந்தியாவுக்கு 5 விக்கெட்டுக்கு 191 ரன்களுடன் லேசான நெருக்கடி உருவானது.

இதைத் தொடர்ந்து விராட் கோலியுடன், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கைகோர்த்தார். இருவரும் அவசரப்படாமல் விளையாடி அணியை சிக்கலில் இருந்து காப்பாற்றி வெற்றிக்கு வழிவகுத்தனர்.



சதத்துக்காக ஆடிய கோலி

47-வது ஓவர் முடிந்திருந்த போது அணியின் வெற்றிக்கும், கோலியின் சதத்திற்கும் 7 ரன் தேவையாக இருந்தது. இதை மனதில் வைத்து ஆடிய கோலி 48-வது ஓவரின் முதல் பந்தில் 2 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ஒரு ரன்னுக்கு ஓட மறுத்தார். சிக்சருடன் ஆட்டத்தை நிறைவு செய்ய மேட் ஹென்றி வீசிய பந்தை தூக்கியடித்தார். சரியாக 'கிளிக்' ஆகாத அந்த பந்து பிலிப்சிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

இதனால் ஒரு கனம் மைதானமே நிசப்தமானது. ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்த ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (49 சதம்) சமன் செய்யும் அரிய வாய்ப்பை 5 ரன்னில் நழுவ விட்டார். கோலி 95 ரன்களுடன் (104 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். இதன் பின்னர் இறங்கிய ஷமி ஒரு ரன் எடுத்தார். இறுதியில் ஜடேஜாவின் பவுண்டரியுடன் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது.

இந்தியா வெற்றி

இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 39 ரன்களுடனும் (44 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷமி ஒரு ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஷமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்திய அணிக்கு இது 5-வது வெற்றியாகும். தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் இந்தியா 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியதுடன், அரைஇறுதி வாய்ப்பையும் நெருங்கியது. அதே சமயம் 5-வது லீக்கில் ஆடிய நியூசிலாந்துக்கு இது முதலாவது தோல்வியாகும். அத்துடன் ஐ.சி.சி. தொடர்களில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்தை தோற்கடித்ததில்லை என்ற சோகத்துக்கும் இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 29-ந்தேதி இங்கிலாந்தை லக்னோவில் எதிர்கொள்கிறது.



முகமது ஷமி சாதனை

* இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர்களில் 54 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். ஒரு நாள் போட்டியில் அவர் இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது இது 3-வது முறையாகும். ஹர்பஜன்சிங், ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு பிறகு 3 முறை 5 விக்கெட் எடுத்த இந்திய பவுலர் ஷமி தான்.

* உலகக் கோப்பை போட்டிகளில் முகமது ஷமி இதுவரை 12 ஆட்டங்களில் 36 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த அனில் கும்பிளேவை (31 விக்கெட்) பின்னுக்கு தள்ளினார். இந்த வகையில் முதல் இரு இடங்களில் ஜாகீர்கான், ஸ்ரீநாத் (தலா 44 விக்கெட்) உள்ளனர்.

ஒரே ஆண்டில் 50 சிக்சருக்கு மேல் விளாசிய ரோகித் சர்மா

இந்திய கேப்டன் ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்சர் அடித்தார். இதையும் சேர்த்து இந்த ஆண்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 53 ஆக (21 ஆட்டம்) உயர்ந்தது. சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஓராண்டில் 50-க்கு மேல் சிக்சர் நொறுக்கிய 3-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். 2015-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 58 சிக்சரும் (20 ஆட்டம்), 2019-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் ெகய்ல் 56 சிக்சரும் (17 ஆட்டம்) அடித்துள்ளனர்.

பனிப்பொழிவால் ஆட்டம் நிறுத்தம்

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 16-வது ஓவரில் திடீரென அதிகமாக பனிபொழிந்தது. மைதானமே பனிப்போர்வையால் போர்த்தப்பட்டது போன்று காட்சி அளித்தது. வீரர்கள் பந்தை தெளிவாக பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டு, வீரர்கள் வெளியேறினர். இதனால் 15 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு பனிவிலகி, நிலைமை சரியானதும் போட்டி தொடர்ந்து நடந்தது.

2 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த கில்

இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் 16 ரன் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை (38 இன்னிங்ஸ்) கடந்தார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டி உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 40 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்ததே அதிவேகமாக இருந்தது. அவரது 12 ஆண்டு கால சாதனையை கில் முறியடித்தார்.



கோலி முதலிடம்

இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் இந்தியாவின் விராட்கோலி (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 354 ரன்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ரோகித் சர்மா (311 ரன்) உள்ளார்.


Next Story