தோல்வி பயம் காட்டிய லிட்டன்.. துல்லியமான ரன் அவுட்டால் திருப்புமுனை கொடுத்த ராகுல்- வைரல் வீடியோ


தோல்வி பயம் காட்டிய லிட்டன்.. துல்லியமான ரன் அவுட்டால் திருப்புமுனை கொடுத்த ராகுல்- வைரல் வீடியோ
x
தினத்தந்தி 2 Nov 2022 2:32 PM GMT (Updated: 2 Nov 2022 2:47 PM GMT)

சேசிங்யின் போது ஒரு கட்டத்தில் வங்காளதேச அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

அடிலெய்டு,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 15 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் வங்காளதேச அணி சேசிங்யின் போது அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் கடந்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்தார். இதனால் அந்த அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டது.

இதன் பிறகு தான் மழை குறுக்கிட்டு போட்டி பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற பிறகு போட்டி தொடங்கியது. அப்போது விக்கெட்களை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. அதற்கு ஏற்ற வகையில் 8-வது ஓவரின் 2-வது பந்தில் கே எல் ராகுலின் அற்புதமான 'த்ரோவால்' லிட்டன் தாஸ் ரன் அவுட் செய்யப்பட்டார்.

அஸ்வின் வீசிய அந்த பந்தை அடித்த சாண்டோ 2-வது ரன் எடுக்க முயற்சிக்க, அந்த பந்தை பில்டிங் செய்த ராகுல் பந்துவீச்சாளர் அஷ்வினிடம் பந்தை எறிந்தார். ஆனால் அது 'டிரெக்ட் ஹிட்டாக' ஸ்டம்பில் பட அந்த முனை நோக்கி ஓடி வந்த லிட்டன் தாஸ் ரன் அவுட்டானார்.


இதன் பிறகு வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பின்னர் தோல்வியுற்றது. லிட்டன் தாஸ் ஆட்டமிழந்த விரக்தியில் கோபமாக வெளியேறினார். போட்டியின் திருப்புமுனையாக அமைந்த ராகுலின் இந்த ரன் அவுட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story