"இந்தியாவை விட எங்களிடம் சிறந்த மிடில்-ஆர்டர் உள்ளது" - பாகிஸ்தான் முன்னாள் வீரர்


இந்தியாவை விட எங்களிடம் சிறந்த மிடில்-ஆர்டர் உள்ளது - பாகிஸ்தான் முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 20 Aug 2023 3:52 PM IST (Updated: 20 Aug 2023 4:07 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவை விட எங்களிடம் சிறந்த மிடில்-ஆர்டர் உள்ளது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

லாகூர்,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த தொடருக்கு முன்னதாக வரும் 30ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் முறையில் நடைபெற உள்ளது. இந்திய அணியில் மிடில் ஆர்டரில் கடந்த உலகக்கோப்பை முதல் குழப்பம் நீடித்து வருகிறது.

நம்பர் 4 இடத்தில் யுவராஜ் சிங்கிற்கு பின்னர் பொருத்தமான வீரர் கிடைக்காமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. சமீப காலமாக அந்த இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேய்ஸ் அய்யர் காயமடைந்ததால் மீண்டும் அந்த இடத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியை காட்டிலும் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் மிகச்சிறப்பாக உள்ளது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

எங்களிடம் பாபர், பக்கார் ஜமான், இமாம், ரிஸ்வான் ஆகியோர் டாப் ஆர்டரிலும், இப்திகார் மற்றும் சல்மான் அலி மிடில் ஆர்டரிலும், ஷதாப் கான், முகமது நவாஸ் ஆகியோர் கீழ் வரிசையிலும் உள்ளனர். இந்தியாவை ஒப்பிடுகையில் பாகிஸ்தான் அணியில் சிறந்த மிடில் ஆர்டர் உள்ளது.

ஒருவேளை இஷன் கிஷன் நம்பர் 5ல் இறங்கினால், அவர் எப்படி செயல்படுவார் என்பது நமக்கு தெரியாது. இந்தியா திலக் வர்மாவை நம்பர் 3ம் இடத்திலும், விராட் கோலியை நம்பர்4ம் இடத்திலும் களம் இறக்கலாம்.

இந்திய அணி நம்பர் 4, 5,6 ம் இடத்தில் யாரை களம் இறக்கலாம் என்பதில் சிக்கலை சந்திக்கும். அவர்களுக்கு முதல் 3 இடங்களில் ரோகித், கில், கோலி ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்கள் முன்று பேரையுமே இந்திய அணி அதிகம் சார்ந்திருக்கும். அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story