"இந்த சீசனில் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம்" - பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான்


இந்த சீசனில் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம் - பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான்
x

‘பவர்பிளே’யில் அதிக விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு வழிவகுத்தது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்தார்.

தர்மசாலா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தர்மசாலாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 7-வது வெற்றியை ருசித்ததுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் ஊசலாடி கொண்டிருக்கிறது. 8-வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்தது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி தொடர்ந்து 9-வது முறையாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் (50 ரன்), தேவ்தத் படிக்கல் (51 ரன்), ஹெட்மயர் (46 ரன்) ஆகியோர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியில் 21 வயதான ஜெய்ஸ்வால் 42 ரன்னை எட்டிய போது ஐ.பி.எல். போட்டி தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த சர்வதேச போட்டியில் ஆடாத வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் நடப்பு தொடரில் 14 லீக் ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 625 ரன்கள் குவித்துள்ளார். இந்த வகையில் இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஆடிய ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் 616 ரன்கள் (11 ஆட்டங்களில் ஒரு சதம், 5 அரைசதத்துடன்) எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த 15 ஆண்டு கால சாதனையை ஜெய்ஸ்வால் தகர்த்து புதிய சரித்திரம் படைத்தார்.

தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கருத்து தெரிவிக்கையில், 'பவர்பிளேயில் நாங்கள் (முதல் 6 ஓவரில்) அதிக விக்கெட்டுகளை (48 ரன்னுக்கு 3 விக்கெட்) இழந்தது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் சாம் கர்ரன், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நாங்கள் நல்ல நிலைக்கு திரும்பினோம்.

இந்த ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் பீல்டிங் சிறப்பாக இருக்கவில்லை. கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டது எங்களுக்கு பாதகமாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் எடுத்ததிருந்தால் நல்ல ஸ்கோராக அமைந்திருக்கும். நாங்கள் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் பேட்டிங்கிலும், சில நேரங்களில் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் இரண்டிலும் ஒருசேர சிறப்பாக செயல்படவில்லை.

இளம் வீரர்களை அதிகம் கொண்ட அணியான நாங்கள் இந்த சீசனில் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். ஆட்டம் கடைசி வரை செல்லும் என்பதை அறிந்ததால் சிறந்த பவுலர்களை முதலில் பந்து வீச வைத்தேன். எனவே கடைசி ஓவரை வீசும் வாய்ப்பு ராகுல் சாஹருக்கு வழங்கப்பட்டது. முந்தைய ஆட்டத்தில் ஹர்பிரீத் பிராருக்கு கடைசி ஓவரை வீசும் வாய்ப்பு கொடுத்தோம். ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழ்நிலையை பொறுத்து தான் இந்த முடிவு எடுக்கப்படுகிறது' என்றார்.


Next Story