மைதானத்தில் கோலி - கம்பீர் மோதலுக்கு யார் காரணம்...?
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
லக்னோ,
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோவில் நேற்று நடந்த 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோவை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
இதனிடையே, இந்த போட்டியின் போதும் போட்டிக்கு பின்னரும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. போட்டிக்கு பின்னர் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் கை குலுங்கி சென்றபோது லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சக வீரர்கள் அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் இருவரையும் சமாதானம் செய்து அழைத்து சென்றனர். அதேபோல், லக்னோ அணியின் நவீன் உல் ஹக்கிற்கும் பெங்களூரு அணியின் வீராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல் தடுத்து இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர்.
மோதல் ஏற்பட காரணங்கள்:-
லக்னோ பேட்டிங் செய்தபோது 17-வது ஓவரை நவீன் உல் ஹக் களத்தில் நின்றார். அந்த ஓவரை சிராஜ் வீசினார். அப்போது, நவீன் கிரீஸ்-க்குள் நின்றுகொண்டிருந்தபோது சிராஜ் பந்தை ஸ்டெம்ப் மீது வீசினார். இது மோதல் ஏற்பட முதல் காரணமாக அமைந்தது.
17வது ஓவரில் களத்தில் நின்ற நவீன் உல் ஹக்கிற்கும் பீல்டிங் களத்தில் நின்ற பெங்களூரு வீரர் விராட் கோலிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஆடுகளத்தின் மையப்பகுதியில் ரன் ஓடுவதால் களம் பாதிக்கப்படுவது போன்று கூறும் வகையில் விராட் கோலி நவீன் நோக்கி கூறியது போல் காட்டிகள் வெளியானது. அப்போது இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
ஆட்டகளத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட நிலையில் போட்டி நடுவர், லக்னோ வீரர் அமித் மிஸ்ரா இருவரும் உடனடியாக தலையிட்டு கோலியையும், நவீன் உல் ஹக்கையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நவீன் உல் ஹக் கேட்ச் மூலம் அவுட் ஆனார். போட்டியின் இறுதியில் பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியை பெங்களூரு வீரர் கோலி தனது வழக்கமான பாணியான ஆக்ரோஷத்துடனும் உற்சாகத்துடம் கொண்டாடினார்.
இதனையடுத்து, போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் கை குலுக்கி செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, கோலியுடன் கை குலுக்கியபோது நவீன் உல் ஹக் திடீரென கோலியின் கையை பிடித்து சற்று இழுத்தார். இதனால், உடனடியாக இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
பின்னர், நவீனுடனான வாக்குவாதத்திற்கு பின் கோலி மைதானத்தில் தனியே நடந்து சென்ற நிலையில் லக்னோ வீரர் கெயில் மையிஸ் கோலியுடன் சென்று பேசினார்.
அப்போது அங்கு வந்த லக்னோ பயிற்சியாளர் கவுதம் கம்பீர் லக்னோ வீரர் மையிசை கோலியிடமிருந்து தனியே அழைத்து சென்றார். இதையடுத்து கோலி தனியே நடந்து சென்ற நிலையில் திடீரென கம்பீர் கோலி நோக்கி மீண்டும் வந்தார். அப்போது, கோலிக்கும், கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மைதானத்தில் நடந்த இந்த வாக்குவாதத்தை சக வீரர்கள் தடுத்து நிறுத்தி இருவரையும் அழைத்து சென்றனர். பின்னர், லக்னோ கேப்டன் கேஎல் ராகுலுடன் விராட் கோலி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, நவீன் உல் ஹக் நடந்து சென்ற நிலையில் அவரை லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் அழைத்துள்ளார். கோலி அருகே நின்றதால் கேஎல் ராகுலின் பேச்சை கேட்காத நவீன் உல் ஹக் அங்கிருந்து நடந்து சென்றார். இது மேலும் பரபரப்பு அதிகரித்தது.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் மைதானத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போட்டி விதிகளை மீறியதாக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு போட்டி ஊதியத்தில் 100 சதவிகிதமும், நவீன் உல் ஹக்கிற்கு போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதமும் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மோதலுக்கு கடந்த முறை இரு அணிகளும் மோதிய போட்டியே ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. கடந்த 10-ம் தேதி பெங்களூரு மைதானத்தில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின.
இப்போட்டியில் பெங்களூருவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ திரில் வெற்றிபெற்றது. அந்த போட்டியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் வெற்றிக்கு பின் தனது ஹெல்மெட்டை மைதானத்தில் வேகமாக வீசி கொண்டாடினார். அதேபோல், போட்டி முடிந்த பின் லக்னோ பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பெங்களூரு மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி வாயை மூடுமாறு செய்கை காட்டினார்.
கம்பீரின் அந்த செய்கை பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் நேற்றைய போட்டியில் சில கேட்ச்களை பிடித்த விராட் கோலி ரசிகர்களை நோக்கி 'பிளையிங் கிஸ்' (முத்தம்) கொடுப்பது போன்று செய்கை செய்தார்.
கடந்த போட்டியில் லக்னோ வீரர் ஆவேஷ் கானின் செயல்பாடு, பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் செய்கை, நேற்றைய போட்டியில் நவீன் உல் ஹக்கின் செய்கை, விராட் கோலியின் செய்கை என இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளே கோலி - கம்பீரின் நேற்றைய மோதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.